யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்! – கிழக்கிலிருந்தும் விண்ணப்பம்

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என அறியவருகின்றது. அவற்றுள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரின் விண்ணப்பமும் உள்ளடங்குகின்றது எனத் தெரியவருகின்றது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித்தினம் நேற்றுமுன்தினம் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமையாகும். அன்றையதினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல் நிறைவடைந்த வேளையில் யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி.வினோபாபா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்தும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் நடத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக்கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி அறிவிப்பார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு