அரசியல் வியூகத்தை அமைப்பதில் தமது கட்சியினரே வல்லவர்களாம்!

Share


முக்கியமான ஒரு கட்சியின் மூளையாகத் தன்னை நினைக்கின்ற பிரமுகர் ஒருவர் அண்மையில் ஒரு கருத்தினை வெளியிட்டார். அதாவாது எல்லாக் கட்சி களையும் விடவும் தமது கட்சியே அரசியல் வியூகத்தை அமைப்பதில் வல்லது என்று விலாசப்படுத்தியிருந்தார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இலங்கையின் அண்மைய கால அரசியல் நிலை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்

அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காகவும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் எந்த தந்திரத்தையும் கையாளலாம் என்று சாணக்கியரான கௌடில்லியர் தனது அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் குறிப்பிட்டிருந்தார்.அது சர்வாதிகார முடியாட்சிக்குப் பொருந்தலாம்.ஆனால் மக்களாட்சிக்குப் பொருந்தாது.

இலங்கையில் எந்தவிதத்திலாவது அதிகாரத்தைக்கைப்பற்றுவதற்கு எதையாவது பின்பற்றலாம் எனக் குறித்த ஒரு அடிப்படைவாதக் கட்சி நினைக்கிறது. நல்லாட்சிக்காலத்தில் 2019 ஏப்ரலில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள் கூட ஆட்சியைப் கைப்பற்றுவதற்கான சதியென்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையிலும் வேறு தந்திரங்கள் நடைபெறுகின்றனவா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

மத நல்லிணக்கத்தினைச் சீர்குலைப்பதற்காக பல செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.வடக்கு கிழக்கில் பெளத்தர்கள் இல்லாத இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுகின்றன, புத்தர் சிலைகள் நிருமாணிக்கப்படுகின்றன.

சங்கரத்ன தேரர், நட்டாச எதிரிசூரிய போன்ற வர்கள் மதநல்லிணக்கத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறியதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் போதகர் ஜெரோன் பெர்னாண்டோ அவர்கள் ஏனைய மதங்களை அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் நாடு வந்ததும் கைது செய்யப்படவுள்ளார். மத முரண்பாடுகள் சார்ந்த செயற்பாடுகள் ஒரு பக்கம் நகர்ந்து செல்ல, சிறுவர்களைக் கடத்தும் செயற்பாடுகள் மறு பக்கமாக நடைபெறுகின்றன. அதேவேளை கொலைகளும் நடைபெறுகின்றன.பாராளுமன்ற உறுப்பினர் வீரசேகர முரண்பாடான கருத்துகளை கொட்டுகிறார்.

இறுதியாக பெளத்த மதத்தின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு பலவீனம் அடைந்துள்ளன. என்ற கருத்துடன் நாட்டைப்பாதுகாக்கவும், பெளத்தம்,மக்களைப் பாதுகாக்கவும் தாங்களே பொருத்தமானவர்கள் என்ற கருத்து அடிப்படைவாதிகளால் கூறப்படும். அடுத்த தேர்தலில் இவற்றை முதலீடாக்கி ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற திட்டம் திரைமறைவில் வகுக்கப்படுவது போல் தெரிகிறது.

சிங்களம், பெளத்தம்,பாதுகாப்பு, புலிகளின் மீள் எழுச்சி என்ற வார்த்தைகள் மூலமாக மீண்டும் கதிரைகளைப் பிடிக்கலாம், ஜனாதிபதி ஆகலாம் என்ற கருத்தியலில் அரசியல் வியூகங்கள் அமைக்கப்படுகின்றன. பணம்,மதுபானம் அத்துடன்,மோசடிகளில் கைதேர்ந்த ஆட்கள் அதிகாரிகள் இருந்தால் வெற்றி நமதே என்று நினைக்கிறார்கள் பேரினவாத அரசியல்வாதிகள். இதுதான் அவர்களின் அரசியல் வியூகமாக இருக்கமுடியும்.

பேராய‌ர் மல்கம் ரஞ்ஜித் மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள் உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்புகள் பற்றிய உண்மைகள் பலவற்றை அறிந்து விட்டார்கள்.பெரும்பாலான தமிழர்கள்,முஸ்லிங்களும் பேரின அடிப்படைவாத சித்து விளையாட்டுகளை விளங்கியிருப்பார்கள். சுயநல தமிழ்,முஸ்லிம் எடுபிடிகள் விதிவிலக்கானவர்கள். ஆயின் அடிப்படைவாதிகள் மீண்டும் சிங்கள மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றவே சதிகள்,சூழ்ச்சிகளை செய்கிறார்கள்,செய்வார்கள்.ஆனால் அரகலயப் போராட்ட சிங்கள இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதுதான் பேரின அடிப்படைவாதிகளின் தலையிடியாக இருக்கப்போகிறது என்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு