களுத்துறையில் விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து 16 வயதான மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஹோட்டலின் உரிமையாளரின் மனைவி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோட்டலுக்குக் குறித்த மாணவி வந்த போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களைச் சரி பார்க்கத் தவறியதற்காக உரிமையாளரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த மாணவியின் தொலைபேசி தரவுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதனூடாக மேவதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த மாணவியின் கைபேசி சம்பவ தினத்தில் காணாமல்போயுள்ள நிலையில், அதனைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி இறுதியாக ஆசிரியர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடினார் என்று தெரியவந்ததையடுத்து அந்த ஆசிரியரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.