விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் இன அழிப்புகளையோ, கலாசார அழிவுகளையோ செய்ய முடியாமல் சிங்கள பௌத்த பேரினவாதம் திண்டாடிக்கொண்டிருந்தது ஆனால் விடுதலைப்புலிகளின் பலம் இழப்பின் பின்னர் சிங்கள பௌத்த கலாசாரத்தை பரப்பும் அதே வேளை தமிழ் கலாசாரங்களை அழிக்கும் செயற்பாடுகளும் முனைப்படைந்து செல்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் தெரிவித்தார்.
எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கடந்த காலத்தில் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதங்களை ஏந்தினார்கள் என்பதை சிங்கள பௌத்த பேரினவாதம் தற்போது நியாயப்படுத்திக்கொண்டு இருக்கின்றது அதாவது அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணமாக இருந்தது தமிழர்களின் இன அழிப்பு, கலாசார அழிப்பு என்பதை நிருபிக்கின்றார்கள்.
தமிழ் இளைஞர்களை மீண்டும் கொதிப்படைய செய்து அவர்களை வன்முறையில் இறக்குவதன் மூலமாக மீண்டும் வடக்கு கிழக்கில் பயங்கரவாதம் ஆரம்பித்து விட்டது என்று கூறி தற்போது கொண்டுவரப்படவிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை கொண்டு வருவதற்கான ஒரு வழியை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதேவேளை வங்குரோத்து அடைந்துள்ள அரசியல் கலாசாரத்தினை வடக்குக்கிழக்கு எங்கும் பரப்புகின்றார்கள் இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் விளைகின்றார்கள் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி மீண்டும் வங்குரோத்து அடைந்து போன வாக்கு வங்கியை கட்டி எழுப்புவதற்கு பேரினவாதம் துடித்துக்கொண்டிருக்கின்றது என்பதனை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே வேளை பேரின வாதத்தோடு ஓட்டுண்ணிகளாக ஓட்டி உறவாடும் தமிழ் பொம்மைகள் இவற்றை அறிந்தும் தெரிந்தும் எதுவம் பேசாமல் தமது பதவிகளை பாதுகாத்துக்கொண்டு எமது கலாசார மண்ணை அவர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் தமிழ் மக்கள் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
எனவே பொம்மை அரசியல் வாதிகளால் தமிழ் மக்களின் உண்மையான விடுதலையையோ, கலாசாரத்தையோ பெற்றுக்கொள்ள முடியாது கிழக்கு மீட்பார்கள் என்று சொன்னவர்கள் கூட இன்று பொம்மைகளாக இருந்து கொண்டு தங்களது பிழைப்பு வாத அரசியலை நடாத்தி வருகின்றார்கள் எனவும் கூறினார்.