2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில் கொன்றொழிக்கப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஓர் அங்கமான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கல் இன்று தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வீட்டின் அருகில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கல் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று மருதனார்மடம் சந்தியிலும், காரைநகர் இந்துக் கல்லூரி முன்பாகவும், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாகவும், சாவகச்சேரி பஸ் நிலையம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.
நாளை புதன்கிழமை காலை கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாகவும், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மாங்குளத்திலும், நாளைமறுதினம் வியாழக்கிழமை மன்னாரிலும், வவுனியாவிலும் வழங்கப்படும்.
தொடர்ச்சியாக 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் சிவன் கோவில், அன்பொளிபுரம், பத்திரகாளி அம்மன் கோயில், மூதூர் பகுதியிலும், 13ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பங்கேற்புடன் வந்தாறுமூலை வளாகம் முன்பாகவும் செங்கலடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு பிள்ளையார் கோயில் பகுதியிலும், 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் மற்றும் பொத்துவிலிலும் வழங்கப்படும்.
இறுதியாக மே 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் முக்கியமான பாடசாலைகளுக்கு அருகில் வைத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படவுள்ளது.