சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை அமுல்படுத்தும் போது ஏற்படும் எதிர்ப்புகளை அடக்குவதற்காகவே பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டு வருகிறார்கள் என புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நி.பிரதீபன் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு ரீதியில் நாளையதினம் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுபிரசுரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடகிழக்கிலே தொடர்ச்சியாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பாகட்டும், தொன்மைச் சின்னங்களில் கைவைக்கும் விடயங்களாகட்டும் ஒடுக்குதல் என்ற அடிப்படையில் அதாவது ஒரு இனத்தின் மீதோ, மதத்தின் மீதோ அல்லது அந்த மக்களின் நம்பிக்கை மீதோ கை வைப்பது எங்களுடைய சுய நிர்ணய உரிமையைக் கூட கேள்விக்கு உட்படுத்துவதாகவே அமையும்.
அதாவது நாங்கள் ஒரு சுய நிர்ணயத்துக்குரிய தமிழ் பேசும் இனமாகவே இருந்து வருகிறோம். அந்த அடிப்படையில் கிறிஸ்தவ பண்பாட்டு தளங்கள் மீது கை வைத்தால் என்ன?, முஸ்லீம் மக்கள் மீது கை வைத்தால் என்ன?, அல்லது தெற்கிலே இருக்கக்கூடிய சிங்கள மக்கள் மீது கைவைத்தாலோ எங்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும்.
அதுமட்டுமன்றி உத்தேச பயங்கரவாத தடை சட்டம் என்று சொல்லப்படக்கூடிய இந்த சட்டம் வருமாக இருந்தால் ஒரு காட்டுமிராண்டிதனமான ஜனநாயக மறுப்பு சூழலை இலங்கையிலே நாங்கள் காணக்கூடியதாக இருக்கும்.
ஏன் இந்த உத்தேச பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டு வர நினைக்கிறார்கள் என்றால், சர்வதேச நாணய நிதியம் குறிப்பாக சில நிபந்தனைகளை வைத்து கடனை அமுல்படுத்துகின்றது, கொடுக்கின்றது.
அந்த அடிப்படையில் அவர்கள் சொல்லும் நிபந்தனையை அமுல்படுத்த தயாராகும் போது எதிர்ப்புகள் கட்டாயம் கிளம்பவே செய்யும். அந்த எதிர்ப்புகளை இவர்கள் அடக்குவதற்காக, இந்த சட்ட மூலத்தை கொண்டு வருகிறார்கள்.
இது இந்த நாட்டினுடைய, 90வீதமான மக்களின் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை மறுக்கத்தான் போகிறது. ஆகவே அதற்கான வேலைத்திட்டங்களை மெதுவாக செய்ய தொடங்கி விட்டார்கள்.
ஆகவே இது நாட்டினுடைய, ஒட்டுமொத்த நெருக்கடிக்கு இந்த சட்ட மூலம் தயாராகி வருகிறது என மேலும் தெரிவித்தார்.