இந்த தமிழ் நாடாளுமன்ற அரங்கம் மூலமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை.
உண்மையில் அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்ற தமிழ் அரங்கம் பேசக்கூடாது என்றே நான் கூறியுள்ளேன் என தமுகூ தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
ஈழத்தமிழர், மலையகத்தமிழர், முஸ்லிம்கள் என தமிழ் பேசும் மக்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் காளத்திற்கு களம் மாறுபடுகின்றன.
ஆகவே அவற்றை அந்தந்த மக்களின் ஆணைகளை பெற்ற கட்சிகள் தேசிய, சர்வதேசிய அரங்கங்களில் பேசட்டும்.
இங்கே, நாடெங்கும், வடக்கு, கிழக்கு, கொழும்பு உட்பட மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மகாணங்களில் வாழும் தமிழர் எதிர்கொள்ளும்
சமகால பொது நெருக்கடிகள் தொடர்பில், 1)சிங்கள அரசியல் கட்சிகள், 2)சிங்கள சமூக கலாசார மத நிறுவனங்கள் மற்றும் 3)சர்வதேச சமூகம் ஆகியவற்றுடன் இந்த அரங்கம் பேச வேண்டும் என்றே கூறியுள்ளேன்.
முதற்கட்டமாக இப்போது ஒரு சில கட்சிகள் பிறகு ஏனைய தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் என அனைவரையும் இணக்கப்பாட்டுடன் அரவணைக்கவே விரும்புகிறேன்.
முற்போக்கான சிங்கள எம்பிக்களை, அரங்கத்திற்கு பார்வையாளர்களாக கூட அழைக்கலாம் என கூறியுள்ளேன்.
இவை அனைத்தும் எனது கருத்துக்கள்தான். இவை அனைவராலும் ஏற்கப்பட வேண்டும்.
அதேவேளை, ஏற்கனவே கொழும்பில் உள்ள தூதுவர்கள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு, இம்முயற்சியின் தொடர்பில் தமது அக்கறைய தெரிவித்துள்ளார்கள்.
“பிரிபடாத இலங்கைக்குள், அதிகாரங்களையும், வளங்களையும் பிரித்துக்கொண்டு, இலங்கை இறைமையின் பங்காளர்களாக வாழும் முயற்சி” என கட்சிகளுக்கான எனது அழைப்பில் தெளிவாக கூறியுள்ளேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் “பிரிவினைக்கு எதிரான சத்திய பிரமாணம்” செய்து விட்டே பதவி ஏற்றுள்ளார்கள் இதில் சிக்கல் உள்ளோர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே முடியாது.
எனினும் நான் எந்த கட்சியையும், எம்பியையும். வலியுறுத்தி அழைக்கவில்லை. விரும்பியோர் வரலாம். ஏனையோர் தவிர்க்கலாம். எல்லோரும் என் நண்பர்களே.
“மாற்றுவழி” உள்ளோர் அவற்றை தாராளமாக நாடலாம். தாராளமாக போராடலாம். யாரும் ஆட்சேபிக்க முடியாது.
நமது நாடு, வீடு, நிலம், மொழி, மதம், கலை, கலாசாரம், உயிர், பொருளாதாரம், உடைமை, உரிமை என எல்லாமே நாளுக்கு நாள் வேகமாக பறிபோனபடி இருக்கின்றன.
ஆகவே, எவராயினும், எதுவாயினும் செய்வதை விரைவாக செய்ய வேண்டும். ஊடக அறிக்கைகளுக்கு அப்பால் சென்று செயலாற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.