தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அரங்கம் அமைக்க தமிழ் கட்சிகளுக்கு மனோ அழைப்பு!

Share

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா,  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன்,   த.சித்தார்த்தன், சீ.வி.விக்கினேஸ்வரன்  ஆகியோருக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்கள் மற்றும் பங்காளி கட்சி தலைவர்களான பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி ஆகியோரின் உடன்பாட்டுடன் இந்த அழைப்பை விடுப்பதாகவும் தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளார் என தெரிய வருகிறது.

இது தொடர்பில் வினவிய போது, மனோ எம்பி கூறியதாவது,

முதற்கட்டமாக மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சீ.வி.விக்கினேஸ்வரன் ஆயோருக்கு அவர்களது கட்சி பதவிகளை விளித்து இந்த அழைப்பை விடுத்துள்ளேன். தொலைபேசியிலும் உரையாடி உள்ளேன்.

எமது கூட்டணியின் தலைமைக்குழு உறுப்பினர்களான பழனி திகாம்பரம் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் உரையாடி உள்ளேன்.
எனது நோக்கம், இலங்கை நாடாளுமன்றத்தில், தமிழ் நாடாளுமன்ற அரங்கம் (Parliamentary Tamil Caucus) என்ற அமைப்பை உருவாக்குவதாகும்.

இதுபற்றி நான் பல்லாண்டுகளுக்கு முன்பே கலந்துரையாடி உள்ளேன். எனினும் அன்று நிலவிய அரசியல் சூழல் காரணமாக அது அன்று சாத்தியமாகவில்லை. இன்று அதற்கான சாதகமான அரசியல் சூழல் உருவாகி வருவதாக நினைக்கிறேன்.

இதுபற்றி கொழும்பில் வாழும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனையும் சந்தித்து உரையாட முடிவு செய்துள்ளேன்.

நம் நாடு இன்று சந்தித்துள்ள தேசிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை தேட இலங்கை அரசும், அதற்கு துணையாக சர்வதேச சமூகமும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இம்முயற்சிகளை வரவேற்கும் அதேவேளை, பொருளாதார மீட்சியுடன் நின்று விடாமல், தேசிய நெருக்கடிக்கு மூலகாரணமான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தேடலும், இதனுடன் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத்தமிழ் சகோதரர்களின் தனித்துவ அரசியல் அபிலாஷைகளையும், தென்னிலங்கையில் வாழும் மலையக தமிழ் மக்களின் தனித்துவ அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படையாக கொண்டு,  இலங்கை அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை தனித்தனியாக முன்னெடுக்க, அந்தந்த மக்களின் ஆணையை பெற்ற  அரசியல் கட்சிகளின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அரசியல் தீர்வு பேச்சுகளை, தமிழ் நாடாளுமன்ற அரங்கத்தின் மூலம் முன்னெடுக்கும் நோக்கம் எனக்கு கிடையாது.

இலங்கை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் இன்று அன்றாடம் எதிர்கொள்ளும் சமகால நெருக்கடி பிரச்சினைகளையும், தேசிய இனப்பிரச்சினைக்கு காணப்படக்கூடிய தீர்வு எதுவாக இருந்தாலும், அவற்றுக்கான முதன்மை தேவையாக, “இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு”  என்ற அடிப்படை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், அனைத்து பெரும்பான்மை தேசிய கட்சிகளுக்கும் நேரடியாக அறிவிக்கவும், சிங்கள சகோதர்ர்களுக்கு, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அரசியல் கட்சிகளை தாண்டி, நேரடியாக விளக்கமளிக்கவும்,  இவை தொடர்பான எமது கூட்டு செய்தியை சர்வதேச சமூகத்துக்கும், இலங்கை அபிவிருத்தி பங்காளர்களுக்கும் (Development Partners) தெரிவிக்கவும்,  தமிழ் நாடாளுமன்ற அரங்கம் முன்முயற்சிகளை  எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

இந்த முயற்சியில் இன்னமும் பல தமிழ் கட்சிகளை இணைத்துக்கொள்ள வேண்டும், முஸ்லிம் சகோதரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் ஆகிய யோசனைகள் இருக்கின்றன.

அவற்றை எதிர்காலத்தில் கவனிக்க வேண்டும் என விரும்புகிறேன். தற்போது அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் கட்சிகளின் தலைவர்களது அதிகாரபூர்வ பதில்களை அடுத்தே இது தொடர்பில் எனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு