பிரான்சில் 2-வது முறையாக அதிபர் மெக்ரோன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் அறிமுகம் செய்த ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த வழிவகை செய்கிறது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் வன்முறை சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறுகின்றன.
இந்த விவகாரத்தில் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானம் நிறைவேற 287 வாக்குகள் தேவைப்படும் நிலையில் 278 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாக விழுந்தது.
இதன் மூலம் வெறும் 9 வாக்குகள் வித்தியாசத்தில் மறுமலர்ச்சி கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
இதேபோல் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.