மக்கள் வாழ்வை அழிக்கும் ராஜபக்ஷர்களை காக்கும் யானை அரசாங்கம் தான் நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற வட்டார மட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் சென்று நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் இந்த அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதாக இல்லை என்றும் அரசாங்கம் திருடர்களுடன் டீல் போட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது திருடர்களுடன் டீல்போடும் கட்சியல்ல எனவும், மக்களுடன் மட்டுமே டீல் போடும் அரசியல் கட்சியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கூறுவது போல் போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், பேச்சு சுதந்திரம் உள்ளிட்டமக்களின் கருத்து சுதந்திரத்தை தடை செய்யும் ஜனாதிபதி, தடியடி கண்ணீர் புகை பிரயோகங்களால் மட்டுமே பதில் வழங்குவார் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த கோழைத்தனமான அரசாங்கத்துக்கு எதிராக மௌனமாக இருப்பதா அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் வீதியில் இறங்கி இந்த முட்டாள்தனமான அரசாங்கத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவதா என்று மனவேதனையுடன் இருக்கும் மக்களிடம் கேட்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.