ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு முகங்களை வைத்துக்கொண்டு தனது நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்கின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க ஒருபுறம் சமாதான முகத்தை சர்வதேச சமூகத்திற்குக் காட்டிக்கொண்டு மறுபுறம் தமிழ்த் தேசத்தில் இனச்சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை நன்கு திட்டமிட்டு நகர்த்தி வருகின்றார்.
வடக்கு கிழக்கு கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க முற்படுகின்றமை, குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி தொல்பொருள் இடத்தில் புத்தவிகாரை அமைக்கப்பட்டுள்ளமை.
மற்றும் மட்டக்களப்பு, மயிலத்தமடுவில் மாடுவளர்ப்பில் ஈடுபடும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கால்நடைகள் அழிப்பு என்பன அண்மைய உதாரணங்களாகும்.
அத்துடன் மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் கீழ் பெரும்பான்மையினத்தவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை ஆகிய இடங்களில் குடியேற்றும் நோக்குடனேயே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கைக்கு உதவும் நாடுகள் மற்றும் சர்வதேச நிதி வழங்குனர்கள் இலங்கை அரசின் இவ்வாறான இனவாத நடவடிக்கைகளுக்கு உதவக்கூடாது என்பதுடன் நிபந்தனையற்ற உதவிகளை இலங்கைக்கு ஒரு போதும் வழங்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.