வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் எல்லைக்கிராம பகுதியிலுள்ள ஐந்து ஏக்கர் காணி இனந்தெரியாத நபர்களினால் பைக்கோ இயந்திரம் கொண்டு துப்புரவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் கடந்த1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக சென்று முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறானவர்களின் காணிக்கு சில அதிகாரிகளின் துணையுடன் களவாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று கள்ளிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் சிதம்பரம் கிராமத்தி உள்ள காணிக்குள் பைக்கோ இயந்திரத்துடன் அத்துமீறி நுழைந்து சிலர் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட சில நிமிடங்களில் துப்பரவுப்பணிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அதன்பின்னர் மாமடுப் பொலிசார் கிராம அபிவிருத்திச்சங்க அமைப்புடன் தொடர்புகொண்டு விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.
எனினும் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்களின் காணிகள் தற்போது இலக்கு வைக்கப்பட்டு அபகரிப்பதற்கு சில அரச அதிகாரிகளும் துணைபோகின்றனர்.
எனவே இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரச அதிகாரிகள் முவரவேண்டும் இந்தியாவிற்குச் சென்றவர்களின் காணிகள் பாதுகாக்கப்பட்டு அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கிராம அபிவிருத்தித் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.