மறைந்த ஆளுமையான சம்பந்தனின் வாழ்க்கை சுருக்கமும் அரசியல் பிரவேசமும்!

Share

தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழர்களின் உரிமைகளுக்காக – தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக ஓயாது குரல் கொடுத்த – அயராது பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று (30) இரவு 11 மணியளவில் காலமானார்.

அவர் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்த தமிழ்த் தலைவரான இரா. சம்பந்தன், 91 வயதில் உயிர் நீத்தார்.

1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

2015 செப்டெம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காகக் கொழும்பில் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் பூதவுடல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் சுருக்கம்

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணி ஆனார். லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அரசியல் பிரவேசம்

சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின்படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டமைக்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டெம்பர் 7 இல் இழந்தார்.

1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈ.என்.டி.எல்.எப்./ஈ.பி.ஆர்.எல்.எப்./ரெலோலோ/த.வி.கூ. கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.

2001 ஆம் ஆண்டில் த.வி.கூ., அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ.) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு த.வி.கூ. தலைவர் வீ.ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004, 2010, 2015, 2020 நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்

2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐ.ம.சு.கூ.) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசு ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டெம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 டிசம்பர் 18 வரை அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு