நாட்டை அழித்து தம்மை வளர்த்த தலைவர்கள்! சுட்டிக்காட்டும் முன்னால் எம்பி

Share

அரசியல் தலைவர்களில் இரு வகையானவர்கள் உள்ளனர். முதலாம் வகையினர் தம்மை அர்ப்பணித்து நாட்டை அபிவிருத்தி செயபவர்கள் இரண்டாம் வகையானோர் நாட்டை அழித்து தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் கட்டியெழுப்புகின்றவர்களாக உள்ளனர் என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர்

முதலாம் வகை தலைவர்களாக சிங்கப்பூர்த் தலைவர் லீக்குவான் யூ, மலேசியத் தலைவர் மகதீர் முகமட், அமெரிக்கத் தலைவர் ஆபிரகாம் லிங்கன், சீனத் தலைவர் மாவோ சேதுங், இந்தியத் தலைவர் நரேந்திர மோடி போன்ற இன்னும் சிலரைக் கூறலாம்.

அதேவேளை இரண்டாம் வகைத் தலைவர்கள் நாட்டை அழித்து தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் கட்டியெழுப்புகின்றவர்களாக, இவர்கள் காணப்படுவர்.

இவர்கள் சுயநலவாதிகளாக இருப்பர் உகண்டாத் தலைவர் இடியமின், பிலிப்பைன்ஸ் தலைவர் மாக்கோஸ், ஈரான் தலைவர் மன்னர் ஷா, பாகிஸ்தான் தலைவர் ஷியாவுல் ஹக் போன்ற பலரைக் கூறலாம்.

அந்த வகையில் பார்த்தால், இலங்கையில் பல தலைவர்களும் அவர்களின் கீழுள்ள அமைச்சர்கள், இராஜாங்க பிரதி அமைச்சர்களும் இரண்டாம் நிலைத் தலைவர்களாகவே உள்ளனர்.

இவர்கள் நாட்டையும் மக்களையும் சுரண்டி கொழுத்த தனவந்தர்களாக மாறியுள்ளனர். ஊழல்,மோசடி, கையூட்டு, தரகுக் கூலி, மதுபான நிலையம், சட்ட விரோத வியாபாரம் என்பவற்றில் கை தேர்ந்தவர்களாக பலர் உள்ளனர்.

தேர்தல் வெற்றிகள் கூட மோசடி, ஊழல்களாகவே அமைகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை அழித்து தத்தமது வீட்டுப் பொருளாதாரத்தை இவர்கள் கட்டியெழுப்புகின்றார்கள். பல தலைமுறைக்கு வேண்டிய சொத்துகளை சட்டவிரோதமாகத் தேடிக் குவித்துள்ளனர்.

உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சொத்துகளை மறைத்து வைத்துள்ளனர். வீதி,கட்டடம்,பாலம், துறைமுகம் போன்ற கட்டுமானங்களில் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து 10 வீதம் அளவில் கொமிசன் பெறுகின்ற கொள்ளையர்களாகக்காணப்படுகின்றனர். ஏன் இவ்வாறு திரட்டுகிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டால் தமது கட்சிக்கான நிதியம் என்றும் சிலர் நியாயப்படுத்துகின்றனர்.

மணல்,காணி,தொழில்வாய்ப்பு, கல்குவாரி, ஏற்றுமதி, இறக்குமதி ,மீன இறால் அட்டை நண்டு வளர்ப்புகள் அனைத்திலும் கையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்நிய நாடுகள், உலகத் தாபனங்களில் கடன்பட்ட நிதிகள் கூட கையாடல் செய்யப்படுகின்றன.

சாதாரண மனிதர்கள் கூட நாட்டையும் மக்களையும் சுரண்டும் அரசியல் வியாபாரத்தால் செல்வந்தர்களாகும் ஊழல் பொறிமுறை இலங்கையில் 75 ஆண்டுகளாக உள்ளன. யுத்த தளபாடக் கொள்வனவால் பில்லியனர்களாக மாறிய அரசியல் தலைவர்கள் இலங்கையில் உள்ளனர்.

பாதாளக்கும்பல் தலைவர் வலே சுதாவிடம் இருந்து மாதாந்தம் 60 இலட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்ற அரசியல்வாதி கூட பிரபல பேரினவாதக்கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். இவர் கொலைக் குற்றத்தில் சிக்கி நீதிமன்றத்தால் மரண தண்டனைத் தீர்ப்புக்குள்ளானார்.

இவரைப் பொதுமன்னிப்பில் விடுவித்த ஜனாதிபதி இரண்டாண்டில் மக்களால் துரத்தப்பட்டார்.
இப்படியான தப்புகளால்தான் இந்நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.

மட்டக்களப்பில் ஒருவர் கடந்த தேர்தலில் 20 கோடி ரூபாய்கள் செலவு செய்து வெற்றி பெற்றாராம். இம்முறை 50 கோடி ரூபாய்கள் செலவு செய்யவும் தயார் என்று அறைகூவல் செய்துள்ளாராம்.

மோசடியால் பெற்ற கறுப்புப் பணம் மோசடியான தேர்தலுக்கு இறைக்கப்படவுள்ளது என்பதுதான் உண்மை.

மோசடியான சில அதிகாரிகள் பணத்திற்காகவும் பதவி உயர்வுக்காகவும் வாங்கப்பட்டு விடுகின்றார்கள். ஆனால்,நேர்மையான அதிகாரிகள் செய்வதறியாது பயந்து ஒதுங்குகின்றார்கள் இதனை மோசடியர்கள் பயன்படுத்தி வெற்றி அடைகின்றார்கள்.

வடிசாராய உற்பத்தியாளர்களுக்கு சீனி மூடைகளை அன்பளித்து வடி உற்பத்திகளை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கியும்,மோசடிகள் பலவும் செய்தும் வெற்றி பெற்ற கௌரவர்களையும் மக்கள் அறிவார்கள். வடி உற்பத்திகள் பற்றி மக்மகள் தகவல் கொடுத்தால், அதனை வடிக்கும்பலிடம் மாட்டி விட்டு கப்பம் வசூலிக்கும் காவல்துறையினர்,கௌரவ அரசியல்வாதிகளும் உள்ளனர்.

சட்டம் போட்டு தடுக்கும் கூட்டம் தடுக்காது விட்டால்,திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். இதுதான் இலங்கை அரசியலின் யதார்த்த உண்மையாகும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு