முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (27.03.2024) புதன்கிழமை கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையிலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ முகாமிற்கு இராணுவ தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளதாகவும் ,முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர். தீர்வுகள் கிடைக்கப்பெறாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
சற்றுமுன்னர் இராணுவ தளபதி கேப்பாபிலவு இராணுவ பாதுகாப்பு படை தலைமையத்திற்கு உலங்குவானூர்தி மூலம் வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.