பேரினவாதத்துடன் ஒட்டுறவாடி அபிவிருத்தி மாயயைக் காட்டி, தமது பைகளை நிரப்பும் பேரினவாதிகளின் பினாமித் தமிழ் அரசியல்வாதிகளை தமிழர்கள் ஒதுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஜி.சிறீநேசன்,யோகேஸ்வரன் முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மகளிர் அமைப்புத் தலைவர் இரஞ்சினி. கனகராசா, வாலிபர் அமைப்புத் தலைவர் க.சோபனன்,செயலாளர் யோ.சசிகரன் உள்ளடங்கலாகப் பலர் இடம்பெற்றனர்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்ற பின்னர்,இடம் பெற்ற முதலாவது கூட்டம் இதுவாகும்.
மேற்படி தேர்தலில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்தன. இருந்தாலும் தமிழத்தேசியம்,தந்தை செல்வாவின் செல்நெறி வழிகாட்டல் என்பவற்றுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் இக்கூட்டக் கருப்பொருள் அமைந்திருந்தது.
தமிழ்த் தேசியத்தை விடுத்து தலைவர்களோ, பிரதிநிதிகளோ, தமிழ் மக்களோ பயணிக்க வேறுபாதைகள் இல்லை. அவ்வாறு வேறு பாதைகளில் பயணிக்க நினைப்பது என்பது தமிழ்த் தேசியத்தைப் பலமிழக்கச் செய்து பேரினவாதத்திற்கு மறைமுகமாக அல்லது நேரடியாக ஆதரவளிப்பதாகவே அமையும்.
பேரினவாதத்துடன் ஒட்டுறவாடி அபிவிருத்தி மாயயைக் காட்டி, தமது பைகளை நிரப்பும் பேரினவாதிகளின் பினாமித் தமிழ் அரசியல்வாதிகளை தமிழர்கள் ஒதுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. எனவே, தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கு அமைவாக மட்டக்களப்பு ஒன்றுகூடல் அமைந்தது.
மேலும்,அனைவரும் தமிழ்த் தேசியப் பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது. தனி நபர் தேவைகளை விடவும், தமிழர்களின் அபிலாசையும், தமிழரசுக் கட்சியுமே அவசியமானது என்பது இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
எனவே,மட்டக்களப்பின் ஒன்றுகூடலானது ஒற்றுமை,தமிழ்த் தேசியம் என்பதை வலியுறுத்தியதாக அமைந்தது. தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழர் நனுக்கான தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று திடசங்கற்பம் எடுக்கப்பட்டது என்றார்.