வவுனியா-வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற வழிபாட்டில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டமானது இன்று காலை நெடுங்கேணி சந்தியில் ஆரம்பமாகி பேரணியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து அங்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ சிவ வழிபாட்டில் இருந்தவரை எதற்காக கைது செய்தாய் , வெடுக்குநாறிமலை தமிழர் சொத்து, பொலிஸ் அராஜகம் ஒழிக, நெடுங்கேணி பொலிஸாரே பொய் வழக்குகளை மீளப்பெறு உள்ளிட்ட வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடன் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இப் போராட்டத்தில் வேலன் சுவாமிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததையும் குறிப்பிடத்தக்கது.