திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பான வழக்கு விசாரணை திருமலை மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம் (06) எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டாணையை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் (06) எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் வழக்காளி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி சண்முகம் தில்லைராசன், சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமரநாதன் மற்றும் சட்டத்தரணி கரிகாலன் ஆகியோரும் ஆலய நிர்வாக சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சத்தார் மற்றும் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இதன்போது இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிபதி இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக செயலாளர் தனேஸ்வரனை நியமித்ததோடு நிர்வாக சபைக்கு எதிராக வழங்கிய கட்டாணையை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
திருகோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 21ஆம் திகதி தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்றினை பிறப்பித்திருந்தது.
இவ்வாறான நிலையில் குறித்த கண்டாணையானது தங்களுக்கு வழங்கப்படவில்லை என திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையின் தலைவரினால் குறிப்பிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.