இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது (03.03.2024) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகமும், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகமும் பலபரீட்சையில் மோதின. நவஜீவன்ஸ் அணியினர் கடுமையாக போராடியும் துரதிஷ்டவசமாக எந்தவித கோல்களையும் போட முடியவில்லை.
போட்டி நிறைவில் மயிலங்காடு ஞானமுருகன் அணியினர் 2:0 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்று சம்பியன் பட்டத்தை தமதாக்கி கொண்டனர்.
பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் நாகராஜன், முல்லைத்தீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்க கௌரவ விருந்தினர்களாக முல்லை மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் மாதவ ஜெயப்பிரகாஷ், கரைதுறைப்பற்று விளையாட்டு உத்தியோகத்தர் ஜெயந்தன், மதகுருமார்கள் மற்றும் உதைபந்தாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், கிராம சேவையாளர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்றவர்கட்கு காசோலையும், கேடயங்களும், பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.