உரிமையா? சலுகையா? என்பதில சலுகையை முதன்மைப்படுத்துகின்ற மனிதர்களும், நியாயமா? இலாபமா? என்பதில் இலாபத்தை முதன்மைப்படுத்துகின்ற மனிதர்களும் உள்ள சமூகங்களில் உரிமை, நியாயம் சார்ந்த போராட்டங்கள் சலுகைவாதிகளின் சுயநல அன்றாட தேவைகளுக்கான தடைகளாக நோக்கப்படுகின்றன முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஶ்ரீநேசன் தெரிவித்தார்.
இப்படியான சுயநலமிகள் பதவிகளுக்காகவும் பணத்திற்கவும் பறக்கின்றார்கள்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்
ஆளுகின்ற அடிப்படைவாதிகள் அடாவடித்தனமாக நடந்தாலும், அவர்களிடம் மண்டியிட்டு உரிமை நியாயங்களை அசிங்கப்படுத்தி, சலுகை இலாபங்களைப் பெற்றுக் கொள்ளத் துடிக்கின்றார்கள்.
இவர்களுக்கு தமிழ்த் தேசியம்,இலட்சியம் நோக்கிய போராட்டம், கூட்டாட்சி,சர்வதேச விசாரணைகள், இனவழிப்புச் சொல்லாடல் போன்றவை பிடிக்காது.
இவர்கள் தேசியத்தை இலட்சியத்தை வீசிவிட்டு, கட்சி தாவி பதவிகளைப் பெற்றுப் பணம் உழைக்கத் தயாராக இருப்பார்கள்.
இப்படியான சுயநலமிகள் தமிழ்த் தேசியக் கட்சிகளில் அதிகரிப்பதற்கு சிங்கள எசமானர்கள், எப்போதும் சலுகைத் தீனிகளைப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
அப்படியான சுயநலமிகள் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஆக்கிரமிப்பதையும் தலைமை ஏற்பதையும் பேரினவாதத் தலைமைகள் விரும்புகின்றன.
அதற்காகத் தேர்தல் மோசடிகள் செய்தாவது தமிழ்ச் சுயநலமிகளுக்கு வெற்றிகளைக் கொடுக்கவும் வழி செய்வார்கள்.
இதற்காகப் புலனாய்வாளர்களைத் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்குள் ஊடுருவச் செய்வதும் ஒரு தந்திரோபாயமாகும். உதவியாளர்கள், அங்கத்தவர்கள்,வேட்பாளர்கள்,பிரசாரர்கள் ஊடகர்கள், ஆலோசகர்கள் போன்ற வடிவங்களில் கடசிகளுக்குள் ஊடுருவி கட்சியை சிதைத்து அழிக்க முற்படுகின்றனர்.
இவ்விடயத்தில் கட்சித்தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அதிகமான எச்சரிக்கையோடும் விழித்தலோடும் செயலாற்ற வேண்டியுள்ளது என்றார்.