இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
சாந்தனின் இறப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்தியா தீர்வை எமக்கு தருவதெனில் எப்போதே தந்திருக்க வேண்டும். தீர்வு விடயத்தில் நழுவல் போக்கிலையே இருக்கின்றது.
அவர்களால் அறிவிக்கப்பட்ட மாகாணசபை என்பது கூட இன்றுவரை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் அரசாங்கத்தின் போக்கிலேயே விட்டுக்கொடுக்கும் நிலைதான் காணப்படுகின்றது.
மாகாண சபை இன்று இல்லாத நிலையில் தான் காணப்படுகின்றது. அதேபோன்றுதான் சிறைச்சாலையில் இருந்த சாந்தனுடைய இறப்பும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிகழ்வாகும்.
இறுதியாக எழுதிய கடிதம், தாய் அதற்காக போராடிய விடயங்கள் இவ்வளவு காலமும் சிறையில் வைத்திருந்து போராடிய தியாகியை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கலாம். அந்த ஆசையை கூட நிறைவேற்றாமல் கொடூர வேலையை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே எங்களுக்கு செய்வது போல் இந்திய அரசாங்கமும் இவ்விடத்தில் செய்திருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.