இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுடைய காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு பெரும்பான்மையின சிங்கள மக்களை குடியேற்றி இனவிகிதாசாரத்தையும், இன சமத்துவத்தையும் அழிக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள் என சமூக செயற்பாட்டாளரான இரத்தினராசா மயூரன் தெரிவித்தார்.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் நீதிமன்றிற்கு வருகை தந்து வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த வழக்கானது ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் தொடர்ச்சியாக தவணையிடப்பட்டு கொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் சந்தேக நபர்களாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை கூட மன்றிற்கு கொண்டு வரமுடியாத நிலையிலே இருக்கிறார்கள்.
அந்தவகையில் எங்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சட்டவிரோதமாக தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு அரசனுடைய எந்தவித நடைமுறை விதிகளையும் பின்பற்றாது நள்ளிரவில் , ஒரு விடுமுறை தினத்தில் போடப்பட்ட எல்லைக்கற்கள் இன்றுவரைக்கும் குருந்தூர்மலை சுற்று அயற்புறங்களில் அரச, தனியார் காணிகளில் அகற்றப்படாத நிலையில் அதற்கான எந்தவொரு தீர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் உள்ளது.
ஏற்கனவே இருந்த கோத்தபாய ராஜபக்ச அரசாங்கமாக இருந்தாலும் சரி தற்போதுள்ள ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமாக இருந்தாலும் சரி தமிழ் மக்களுடைய காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு பெரும்பான்மையின சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றி இனவிகிதாசாரத்தையும், இன சமத்துவத்தையும் அழிக்கும் நோக்கிலே மேற்கொள்ளப்படுகின்றது.
எமது காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் நோக்கத்தில் தொடர்ச்சியாக தவணையிடப்படுகின்றது. உண்மையிலே குறித்த வழக்கிற்கு எதிரான விசாரணைகள் திறந்த மன்றிலோ அல்லது அரசியல் ரீதியிலான பிரதிநிதிகளின் நிர்ப்பந்தம் அல்லது அவர்களுடைய முன்னெடுப்புகள் நாடாளுமன்றம் , அரசியல் சபைகள் ஊடாக நினைவுறுத்தப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக தன்னார்வலர்கள் மீதும், அரசியல் வாதிகள் மீதும் பொய் வழக்குகளை சுமத்தி அவர்களுக்கு எதிரான குற்றங்களை முற்படுத்த முடியாத நிலையிலே இலங்கை பொலிஸார் இருக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.