ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனின் உடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படும்!

Share

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன் பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

வழக்கில் விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தாா்.

தொடர்ந்தும் இலங்கைக்கு தன்னை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் பல போராட்டங்களின் பின் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

எனினும் சில ஆவணங்கள் தேவைப்பட்டதால் அவரது இலங்கைப் பயணம் மேலும் தாமடைந்தது.

இந்நிலையில் சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

கல்லீரல் செயலிழப்பு காரணமாகவே சாந்தன் உயிரிழந்துள்ளதாகவும் தீவிர சிகிச்சை அளித்த போதும் இன்று காலை 07.50 மணிக்கு சாந்தனின் உயிர் பிரிந்ததாக தெரிவித்த ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி தேணிராஜன் பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தனை அவரது சகோதரர் மதிசுதா கடந்த வெள்ளிக்கிழமை பார்வையிட்டிருந்தார்.

உயிரிழந்த சாந்தனின் உடலை பார்ப்பதற்காக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி மற்றும் பேரறிவாளன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு