கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு சர்வதேச நாடுகளுக்கும் பயணிக்கவிருந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸூக்கு சொந்தமான 3 விமானங்களின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை (27) பயணத்தை மேற்கொள்ளவிருந்த 3 விமானங்களின் பயணங்களை நேற்று இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அஷோக பத்திரகே தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே குறித்த விமானங்களில் பயணிக்கவிருந்த பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று பயணிக்கவிருந்த 7 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதாக நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
UL 364, UL 161, UL 314, UL 121, UL 189, UL 880 மற்றும் UL 470 ஆகிய இலக்கங்களைக் கொண்ட விமானங்களின் பயணங்களே இவ்வாறு தாமதமடைந்துள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.