தலைமன்னார் வடக்கு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி கழுத்து நெரித்து கொல்லப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
உயிரிழந்த சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தென்னந்தோப்பில் பணியாற்றும் 55 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி கோரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய இன்று பிற்பகல் மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் தொழில் நிமித்தம் புத்தளம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் சிறுமியும் அவரது சகோதரர்களும் தங்களது பாட்டியுடன் தலைமன்னாரில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த சிறுமி நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போயிருந்ததாக அவரது பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் அருகிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.