இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செலவினங்களை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபாவில் முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளமை தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் அமைச்சரவை இந்த விடயத்திற்கு இணங்கியுள்ளது.
அரசாங்கத்திடம் காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதி நிலைமையினால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதியை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினூடாக வழங்க வேண்டியுள்ளமை தொடர்பிலும் அமைச்சரவை ஆராய்ந்துள்ளது.
எவ்வாறாயினும் அந்த 2 தேர்தல்களையும் நடத்துவதற்கு முன்னதாக விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பரிந்துரைகளுக்கு அமைய தேவைப்படும் பட்சத்தில் தொடர்புடைய தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பதற்கான திருத்தங்களை நாடாளுமன்ற அனுமதியின் அடிப்படையில் அறிமுகம் செய்ய வேண்டுமெனவும் அமைச்சரவை கலந்தாலோசித்துள்ளது என்றார்.