போலி திருமணங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோதமாக ஆட்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழுவை ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் சைப்ரசில் கைது செய்துள்ளனர்.
இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவினர் ஆட்கடத்தலிலும் கறுப்புபணத்தை வெள்ளைபணமாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சட்டவிரோத குடியேற்ற நோக்கங்களுக்காக போலியாக திருமணம் செய்துகொள்ள வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்த நபர்களை கட்டாயப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடுகளை சேர்ந்த நபர்களை லத்வியா, நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பெண்களை சைப்ரஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்நாடுகளைச் சேர்ந்த பெண்களை வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர் என ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுவை சேர்ந்த இந்தியர், பாகிஸ்தானியர், நெதர்லாந்து பிரஜைகள் பிரதான சந்தேக நபர்கள் எனக்கூறப்படுகிறது.
விமானப் பயணச்சீட்டு கொள்வனவு செய்தல், போலி கடவுச்சீட்டு உட்பட தேவையான ஏனைய ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில் இந்த சந்தேக நபர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களில் இரண்டு பேர் நெதர்லாந்து மற்றும் லத்வியா நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 13 பேர் சைப்ரஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லத்வியா மற்றும் நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த பெண்களை இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளுக்கு போலியாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் இவ்வாறு 133 போலி திருமணங்களை செய்து வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.