கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நேற்றையதினம் (27.01) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையிலையே கேப்பாபிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நேற்று (27) மாலை 3 மணியில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை வீட்டில் தனிமையில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தபோது பிரச்சினைக்குரிய அயல் வீட்டு குடும்பஸ்தர் அங்கு சென்று போதைப்பொருளை வைத்து விட்டு பொலிஸாரை அழைத்துவந்து குறித்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.
எனவே குறித்த சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல் வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும் அதற்கான நீதி தமக்கு வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி இரு குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.