இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன் அடுத்த வாரம் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவு நாட்டில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதால் ஜனவரி நடுப்பகுதியில் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த பின்புலத்திலேயே மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் மின் கட்டணத் திருத்தம் நுகர்வோருக்கு சாதகமான வகையில் அமையும் எனவும் இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்ற அங்கீகாரம் விரைவில் பெறப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.