அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்!

Share

கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததுடன் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதில்கூட நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டோம் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஆரம்பம் முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில் இது குறித்து கலந்துரையாடலொன்றின் போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வரி அறவீடுகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டோம். அதேபோன்று அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி சகல அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினோம்.

நாட்டில் வரி வருமானத்தை சேகரிக்கும் பிரதான கட்டமைப்புக்களான வருமானவரித்திணைக்களம், சுங்கத்திணைக்களம் மற்றும் மதுவரித்திணைக்களம் என்பன வரி அறவீடுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழுக்களும் குறிப்பிடத்தக்களவிலான பங்களிப்பினை வழங்கின.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு நாம் இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது. ஆனால் அதனை முன்னிறுத்தி நாம் மிகவும் வலுவான அடித்தளத்தை இட்டிருப்பதாகக் கருதுகின்றோம்.

குறிப்பாக கடந்த காலங்களில் சமுர்த்தி கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்டதைப்போன்ற 3 மடங்கு நிதி 2024 இல் அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள் என்பதை நாமறிவோம்.

எனவேதான் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருப்பினும் இவ்வாறான சமூகப்பாதுகாப்புக் கொடுப்பனவுகளுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 இலிருந்து 2023 க்கு நகர்ந்ததை விட 2023 இல் இலிருந்து 2024 க்கு ஓரளவு சிறந்த நிலையிலேயே நகர்கின்றோம்.

இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி (வற்வரி) அறவீடானது வருமானத்தை அதிகரிப்பதையும் வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

முன்னர் பெறுமதிசேர் வரிக்குள் உள்வாங்கப்பட்டிருக்காத பொருட்கள் இம்முறை அதில் உள்வாங்கப்பட்டிருப்பினும் இதுபற்றி நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துவோம்.

மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெறுமதிசேர் வரி மூலமான வருமானத்தை 2.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்துவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். வருமான வீழ்ச்சியே இப்பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே மிகமோசமான நோய்க்கு முகங்கொடுத்திருந்த எமது நாட்டுக்கு இப்போது அவசியமான மறுசீரமைப்புக்கள் மூலம் சத்திரசிகிச்சை செய்திருக்கின்றோம்.

அதிலிருந்து நோயாளியால் உடனடியாக மீளமுடியாது. ஆனால் இதிலிருந்து மீளமுடியும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் அதனைச் சாதிக்கமுடியும் எனவும் தெளிவு படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு