ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (03.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளார்கள். இதனால் புகையிரத கடவைகளில் பயணிக்கும் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
04.01.2024 ஆம் திகதி தொடக்கம் 06.01.2024 ஆம் திகதி வரை அதிகாலை 6.00 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளார்கள். இதனால் மக்கள் அவதானமாக பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள 2064 புகையிரத கடவை ஊழியர்களை அடிமைகளாக நயவஞ்சகமாக நடத்தப்பட்டு வருவதை கண்டித்து 4 மற்றும் 5ம் திகதிகளில் வடமாகாணத்திற்கு வியஜம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் புகையிரத கடவை ஊழியர்களை இலங்கை பொலிசாரிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையான 11 ஆண்டு காலமாக பொலிசாரால் 6 மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று பி.ஏ.சி 25 கீழ் 2014 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஆறுமாத காலத்திற்குள் அரச திணைக்களங்களில் சேவையாற்றும் நபர்களுக்கு அந்த திணைக்களத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் உள்வாங்கப்பட்ட 2064 புகையிரத கடவை ஊழியர்கள் நாள் ஒன்றிற்கு 250 ரூபா படி மாதம் 7500 ரூபா வேதனத்திற்கு அவர்களின் எதிர்காலத்தினையே அர்ப்பணித்து நாட்டு மக்களை பாதுகாக்கின்ற கடமையில் ஈடுபட்டு வருகின்ற 2064 ஊழியர்களுக்கும் உத்தரவாதம் அற்ற நிலையில் பொலிசாரின் கட்டுப்பாட்டில் ஊழியர்கள் தவித்து நிற்கின்றார்கள்.
உடனடியாக இலங்கை பொலிசாரின் அடாவடித்தனத்தில் அடிமைத்தனத்தில் இருந்து எங்களின் ஊழியர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி நிக்கின்றோம்.
இன்றைய பொருளாதார நிலையில் 250 ரூபாவிற்கு ஒரு வேளை அரிசியினை கொள்வனவு செய்யமுடியாத சம்பளத்தினை கொண்டு குடும்பங்களை நடத்துவது எவ்வாறு பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை கொண்டு நடத்துவது எவ்வாறு என்பது இன்று இருக்கக்கூடிய அரச அதிகாரிகள் ஜனாதிபதி அவர்களின் மூளைக்கு எட்டவில்லையா என்பது மனவேதனை அளிக்கின்றது.
உடனடியாக மக்களின் வாழ்கை நிலையினை கவனத்தில் கொண்டு இன்று வட்வரி அதிகரிப்பினை கவனத்தில் கொள்ளாது வரிச்சுமையினை மக்கள் மீது திணிக்காது மக்களின் எதிர்காலத்தினை சிந்தித்து அன்றாட வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் விதத்து அவர்களின் வாழ்க்கையினை மாற்றியமைக்கும் சுலபமான திட்டங்களை முன்வைக்க வேண்டும்
விசேடமாக 250 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொண்டு இந்த நாட்டிற்காக தங்களின், பிள்ளைகளின் எதிர்காலத்தினை இழந்து மிகவும் பொருளாதார நலிவிற்கு உட்பட்டு இருக்கின்ற புகையிரத கடவை ஊழியர்களின் வாழ்க்கையில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தினை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தினை பயன்படுத்தி உடனடியாக அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும் அவர்களின் சம்பள உயர்வினை பெற்று கொடுக்க வேண்டும்
பொலிசாரின் கீழ் இருக்கக்கூடிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று புகையிரத திணைக்களத்திற்குள் அவர்களுக்கு நிரந்தர நியமன வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 48 மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவிருக்கின்றோம்.
அத்துடன் உடனடி தீர்வு எட்டப்படாத சந்தர்ப்பத்தில் இந்த நாடு பாரதூரமான பின்விளைவுகளை இந்த அரசு சந்திக்கும் புகையிரத திணைக்களம் ஸ்தம்பிக்கும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.