நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
விஜயகாந்த் மரணம் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் தொண்டர்களும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
அவரது உடல் சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதுடன் அவரது இல்லத்தில் தேமுதிக கட்சிக் கொடி அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.
நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த்
உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து வந்தார்.
கடந்த மாதம் 18-ம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.
பின்னர் தே.மு.தி.க தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த 14-ம் திகதி நடந்த கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் முன்னிலையில் அவரது மனைவி பிரேமலதா பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் .
இந்த நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று உடல்நிலை சீரற்ற நிலையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஏற்கெனவே நுரையீரல் தொற்று இருந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதனால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.
விஜயகாந்தின் மரணச் செய்தி திரையுலகையும் அவரது தொண்டர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.