இலங்கையில் ஒற்றையாட்சி முறை தோல்வி – ஜி.ஸ்ரீநேசன்

Share

இலங்கையில் சுதந்திரத்தின் பின்னர் 75 ஆண்டுகளாகப் பின்பற்றிய ஒற்றையாட்சி முறையானது சமூக பொருளாதார அரசியல் கலாசார அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக தோல்வி அடைந்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியல் நிலை தொடர்பாக கருத்துரைக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்

இந்த ஒற்றையாட்சி முறை இலங்கையின் பன்மைத்துவ ஜனநாயகத்தை சிதைத்து விட்டது. மாறாக சிங்களப் பேரினவாத அடக்கு முறைக்கு வழி சமைத்துவிட்டது.

சமூகரீதியாகப் பார்க்கின்றபோது சிங்கள தமிழ் முஸ்லிங்கள் மத்தியில் இலங்கைையர் என்ற தேசிய உணர்வை வளர்க்காமல் இனவாத சிந்தனையை வளர்த்துள்ளது.சமூக ஒற்றுமையை சீரழித்து விட்டது.சிங்களவர் என்பதை சமூகத்தின் மேலாதிக்க வாதிகளாக அடையாளப்படுத்தியுள்ளது. இன மத பிரதேச நல்லிணக்கத்தினை வளர்க்கவில்லை.

இனவாதம் மதவாதம் தலைதூக்கிவிட்டது. இதனால் இன ஒடுக்கு முறை இனவழிப்புகள் ஏற்பட்டுள்ளன. 2009 முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம்,1983 கறுப்பு யூலை என்பன இதற்கான உதாரணங்களாக உள்ளன. அதேவேளை பேரினவாத ஒடுக்கு முறையால் ஏற்பட்ட உள்நாட்டு யுத்ததத்தாலும், ஊழல் மோசடிகள், கையூட்டுகள் வீண்விரயம், வினைத் திறனற்ற பரிபாலனத்தாலும் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாழத்தில் வீழ்ந்துள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் 11 இலட்சம் ரூபாய் கடனாளியாக்கப்பட்டுள்ளான். இலங்கைத் திறைசேரியில் 2019 இல் இருப்பாக இருந்த 7 பில்லியன் அமெரிக்க டொலர், கோத்தபாயவின் இருவருட ஆட்சிக் காலத்தில் பூச்சியமாக்கப்பட்டது.

அதேவேளை இலங்கையர் என்று பெயர்களில் அதிகமான ஊழல்வாதிகள் சட்டவிரோதமாக 56 பில்லியன் அமெரிக்க டொலர்களை,சட்ட விரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ளனர்.

மேலும் ஒப்பந்த வேலைகளின் போது 15 வீதம் என்னும் அளவுக்கு கையூட்டுகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. ஒப்பந்த வேலைகளும் தரமற்றதாகவே உள்ளன.கடன் மூலமாகப் பெற்ற பணத்திலும் கையூட்டுகள் பெறப்பட்டுத்தான் வருகின்றன.

அரசியல் விடயமும் தோல்வி கண்டுள்ளன. ஜனநாயகம் என்பது பல்லினத்துவ தன்மையைப் பெறவில்லை.74 சதவீதமான சிங்கள வாக்குகளால் தீர்மானிக்கப்படும் சிங்கள இன ஜனநாயகமாகவே அமைகின்றது. நீடித்துச் செல்லும் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

தமிழ் பேசும் மக்களை ஒடுக்கினால் அடக்கினால் அதிகமான சிங்கள வாக்குகளைப் பெறலாம் என்று சிங்களத் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

இதனால்,அரசியல் இலாபத்திற்காக சிங்களவர்கள் சார்பான சட்டங்கள்,திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. கலாசார ரீதியாகப் பார்த்தாலும் பெளத்தகலாசாரம் மேலோங்கி நிற்கின்றது.பெளத்தர்கள் இல்லாத இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இந்துக்களின் கோவில்கள் அழிக்கப்பட்டும் வருகின்றன.

இவ்வாறு அடிப்படைவாத பிற்போக்குவாதத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் மூழ்கிக் கிடப்பதால், நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத நிலை காணப்படுகின்றன.பல நாடுகள் விண்ணிலும் மண்ணிலும் அறிவியல் தொழில் நுட்பத்தால் சாதனைகள் படைத்து அந்நாடுகளை அபி விடுத்தி செய்து வருகின்றன.

நம் நாடு அடிப்படைவாதத்தில் மூழ்கி தொல்லியல் ஆய்வு என்ற ரீதியில் பெளத்த மயமாக்கலைச் செய்து இனப்பகை மதப் பகைகளை வளர்த்து வருகின்றது.

மொத்தத்தில் சமூக, பொருளாதார,அரசியல், அறிவியல், தொழில்நுட்ப,கலாசார ரீதியாக ஒற்றையாட்சி முறையானது தோல்வி அடைந்துள்ளது.

எல்லாவற்றையும் தோல்வியடையச் செய்த பேரினவாத அதிகார வர்க்கம் ஒற்றையாட்சி அதிகாரத்தில் தொங்கிக் கொண்டு அதிகாரம் செலுத்தி வருகின்றது.

புத்திஜீவிகள் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. மக்களின் வருமானம் குறைந்துள்ளது. அதேவேளை மக்கள் மீதான அரசின் வரிகள் அதிகரித்து வருகின்றன.ஊழல் மோசடிகள் ஓயாது தொடர்கின்றன.வாழ முடியாத நாடாக, இந்நாட்டை ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டார்கள்.

அதிகாரவர்க்கம் வளமாக வாழுகின்றது, அடிமட்ட மக்கள் வறுமைக்குள் சிக்கிக் மாளுகின்றார்கள். இவைதான் ஒற்றையாட்சி முறையின் தோல்வியால் கிடைத்த பேறுகளாகும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு