மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த மாவீரர் தினத்தன்று அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் இன்று பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு ஒங்கமைப்பில் ஈடுபட்டிருந்த உயர்தரம் பயிலும் மாணவன் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியிருந்த நிலையில் நேற்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இன்று பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் சட்டத்தரணி சதுர்த்திகா தலைமையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு தொடர்பான உத்தரவு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.