ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஒட்டுசுட்டான் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த ஒட்டுசுட்டான் பிரதேசபண்பாட்டு பெருவிழா இன்று(13) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் இருந்து இன்று காலை தமிழர்களின் பாரம்பரிய கலாசாரங்களை பிரதிபலித்து ஆரம்பமான பண்பாட்டு ஊர்தி பவனி ஆனது மாங்குளம் முல்லைதீவு பிரதான வீதியூடாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தை சென்றடைந்து அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அமரர் தில்லையம்பலம் அரங்கில் பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமவிருந்தனராக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும் முன்னைநாள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான நாகலிங்கன் வேதநாயகம் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளம்பலம் உமாமகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன் அவர்களும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் உதவிச் செயலாளர் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர் சிவசுந்தரம் கணேசபிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர்.
அரங்கத்திலே ஒட்டுசுட்டான் பிரதேசத்தினுடைய பல்வேறு கலைஞர்களின் பல்வேறு வகையான நிகழ்வுகளும் சிறப்பாக பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று இறுதியாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட துறை சார்ந்த கலைஞர்களுக்கான பண்டாரவன்னியன் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மதத்தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலாளர், வெலிஓயா பிரதேச செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினுடைய உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், அறநெறி கல்வி நிலையத்தினுடைய ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.