தடிகளால் தலையில் மற்றும் வயிற்றில் தாக்கி ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் கண்டி மேல் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த இரண்டு பிரதிவாதிகள் குற்றவாளிகள் என மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் கண்டறிந்து மரண தண்டனை விதித்துள்ளது.
பிரதிவாதிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திரஇ பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஜுலை 27 ஆம் திகதி கண்டி மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கந்த சந்தியில் சாமி ஐயா தன பாலசிங்கம் என்ற நபரை தாக்குதலுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை குற்றவியல் சட்டத்தின் 296 வது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கண்டி ஹொட்மின்ன கந்த ஹந்திய குருபெத்த பிரதேசத்தை சேர்ந்த டி. எம். சமன் குமார திஸாநாயக்க மற்றும் ஏ. எம். சமரகோன் பண்டார விஜேகோன் என்பவர்கள் ஆவர்.