இலங்கையில் போர்ப் படுகொலை, இனப்படுகொலை நடைபெற்றன என்பதைத் தமிழர்கள் உட்பட நேர்மையான பிற இன மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால், பேரினவாதிகள் இதனை ஏற்க மாட்டார்கள். அவர்களுடன் பிழைப்புக்காக இயங்கும் தமிழ் பண, பதவி வெறியர்கள், ஒட்டுக்குழுக்கள் இதனை உள்ளூர அறிந்தாலும்,
வடிகட்டிய சுயநலத்தால் அந்த உண்மையைக் கூற மாட்டார்கள் என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
அதேவேளை, உயர் நீதிமன்றத்தால் பொருளாதாரக் குற்றவாளிகள் யாவர் என்பதை அடையாளப்படுத்த ப்பட்டுள்ளார்கள். இதனை நாட்டிலுள்ள சகல இன மத மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றோம்.
ஏனெனில் ராஜபக்க சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரக் குற்றத்தால் நாட்டிலுள்ள சகல மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பொருளாதாரக் குற்றத்தின் மத்தியில் சட்ட விரோதமாக இலாபம் அடைந்த ஒரு கும்பலும் இருக்கவே செய்கின்றன.அக்கும்பல் நீதி நேர்மையற்ற இலாப நோக்கக்காரர்களாகவே இருக்க முடியும்.
இலங்கையில் ஜனநாயகம் இனநாயகமாக மாறியதால் போர்க்குற்றம், இனப்படுகொலை பற்றி பேரினவாதிகள் கரிசனை காட்டுவதில்லை. அவர்கள் இனவழிப்பில் ஈடுபட்டவர்களை சிங்கள கதாநாயகர்களாகப் பார்க்கின்றனர்.
இனப்படுகொலை போர்க்குற்றம் பற்றிய பார்வை இரு துருவங்களாக உள்ளன. சிங்களவர்,சிங்கள தேசிய இனவாதப் பார்வையிலே உள்ளனர்.தமிழர்கள் தமிழ்த் தேசிய உரிமைப் பார்வையில் உள்ளனர்.
அந்த வகையில்,இந்த நாட்டில் இரு முரண்பட்ட தேசங்களுக்கான நிலையைக் காட்டுகின்றது. ஒற்றையாட்சி சிங்கள இனநாயகத்தால் இதனைத் தீர்க்கவே முடியவில்லை.
போர்க்குற்றத்தைப் பொறுத்தவரை சிங்கள இனவாதர்கள் கோணல் பார்வை கொண்டவர்களாக இருந்தாலும், பொருளாதாரக்குறம், பொருளாதார க்கொலை என்பது சகல மக்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.
எனவே, பொருளாதாரக்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாமல், சிங்கள மக்களில் கணிசமானவர்கள் ஒத்த நிலைப்பாட்டில் உள்ளனர்.
இதனைத் தவிர்ப்பதற்காக ராஜபக்சக்கள் போர் வெற்றிகளையும், தேரர்கள் அடிப்படைவாதிகளின் நற்சான்றிதழ்களையும் நாடி வருகின்றனர்.இதனால், ராஜபக்சக்கள் விகாரைகளை நாடி வருகின்றனர்.
எது எப்படியாக இருந்தாலும் மொட்டுக்கட்சியானது 2020 தேர்தலில் பெற்ற 144 நாடாளுமன்ற ஆசனங்களில் 80 வீதத்திலும் அதிகமான ஆசனங்களை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில் பொருளாதாரக் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ராஜபக்சக்கள், மொட்டுக் கட்சியினர் தேர்தலை விரும்பவில்லை.எனவே 2024 வரவு செலவுத் திட்டத்தை விமர்சித்தாலும்,அதற்கு சார்பாக வாக்களித்து வெற்றி பெறச் செய்யவே விரும்புவர். தேர்தல் தில்லுமுல்லுகளை எதிர்காலத்தில் மொட்டுக் கட்சியினால் செய்வதும் கடினமாகவே இருக்கும்.
கடந்த தேர்தலில் பாரிய குற்றம் கூட தேர்தல் தில்லுமுல்லுகளால் வெற்றி பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் வென்றதால், பொருளாதாரத்தில் மோசடிகள்,ஊழல்கள் அதிகரித்தே உள்ளன.
இவர்கள் தமது வீட்டுப் பொருளாதாரங்களை சட்டவிரோதமாக அதிகரித்துள்ளர்.
அதே வேளை நாட்டுப் பொருளாதாரத்தை பூச்சியத்தை நோக்கித் தள்ளியுள்ளனர்.
இந்த நிலையில் போர்க்குற்றத்தை பேரினவாத வெற்றியின் ஒரு பக்கமாக சிங்கள மக்கள் பார்த்தாலும், பொருளாதாரக் குற்றத்தை மன்னிப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதனையும் கடப்பதற்காக மொட்டுக் கட்சியின் இனவாத முரண்பாடுகளை அதிகரிப்பதற்குப் பாரிய சதிகளைச் செய்வதற்கு முயற்சிப்பர.மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் அதில் ஒருவராக இருக்கலாம். இவர் பல இனவாத செயற்பாடுகளை தமிழர்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றார்.
பொலிசார் தமிழர்களை அடக்குவதில் காட்டும் தீவிரம், தேரர் விடயத்தில் இல்லை. ஆட்சி அதிகாரக் கதிரைக்காக மொட்டுக் கட்சியும் கையாட்களும் எதுவும் செய்வர்.ஆனால் எதிர்காலத்தில் பொருளாதாரக் குற்றத்தைக் கடந்து வெல்வதற்கு வாய்ப்பளிக்காது.
வறுமைக்குள் தள்ளப்பட்ட இலங்கை மக்கள் அக்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளிடம் இருந்து சட்ட ரீதியாக நஷ்டங்களைக் கோரவும் வாய்ப்பு உள்ளது.பொருளாதாரக் குற்றவாளிகளை சட்டரீதியாகவும்,வாக்களிப்பு மூலமாகவும் தண்டிக்க இடமுள்ளது என்றார்.