நாட்டைச் சீரழித்து மக்களை நடுத்தெருவுக்குக் கொணர்ந்த தலைவர்கள் நாட்டுக்குத் தலைமை தாங்கும் தகுதியை இழந்து விட்டார்கள்.அவர்களை இனவாதிகள்,கையாட்கள் தலைவர்களாக்குவது முட்டாள்தனமானதாகும் என முன்னால் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
அண்மையில் நாட்டின் உயர் நீதிமன்றம் நம் நாட்டை சீரழித்தமை தொடர்பான உண்மையைத் தீர்ப்பாக வழங்கியுள்ளது. அதாவது இலங்கையை ராஜபக்சக்கள் சகோதரர்கள் வறுமைக்குள் வீழ்த்தியுள்ளதாக அத்தீர்ப்பின் சாராம்சம் அமைந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
பிழையான தப்பான பொருளாதார முடிவுகளால், ஜனாதிபதியாக இருந்த கோத்தா,பிரதமராக இருந்த மகிந்த, நிதியமைச்சராக இருந்த பசில் மற்றும் இவர்களால் நியமனம் பெற்ற பிரதானிகள் போன்றவர்கள் தம்மிஷ்டப்படி நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாடியுள்ளதாக அறிய முடிகின்றது.
அந்த வகையில்,16 இலட்சம் வரி இறுப்பாளர்களை கோத்தா 4 இலட்சமாகக் குறைத்தார்.இதனால் நாட்டின் வருவாயில் 60 ஆயிரம் கோடி ரூபங்கள் இழக்கப்பட்டது.சீனி இறக்குமதியின் போது ஒரு கிலோவுக்கான ரூபாய் 50 வரியினை 25 சதமாகக் குறைத்ததால் 1700 கோடி ரூபாய்கள் வருவாய் இழக்கப்பட்டது.
விவசாயத் துறையில் இரசாயன வளமாக்கியைத் தடை செய்ததால் 26 ஆயிரம் கோடி ரூபாய்கள் நாட்டின் வருவாய் இழக்கப்பட்டது.மேலும் வெங்காயம், வெள்ளைப்பூடு எண்ணெய் இறக்குமதிகளிலும் பாரிய மோசடிகள் செய்யப்பட்டன.இதை விட இறக்குமதிகளில் கொமிசன்களும் பெறப்பட்டன.
இப்படியான ஊழல் மோசடிகள் கையூட்டுகளால் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குள்ளானது. இப்படியான பொருளாதாரக் குற்றவாளிகளை அறிவுள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்தனர்.
தற்போது அக்குற்றவாளிகள் யாவர் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படியான மோசடித் தலைவர்கள் இன மத அடிப்படை வாதங்களால் மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து ஆட்சிக்கு வந்து நாட்டையும் மக்களையும் அழித்துத் தம்மை வளப்படுத்திக் கொள்கின்றனர்.
இத்தகைய குற்றவாளிகள் யாவர் என்பதை உயர்நீதிமன்றம் அடையாளம் காட்டியுள்ளது.எனவே இவர்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டனர். இவர்களுக்கு சட்டரீதியாகத் தண்டனை அளிக்க வேண்டியது நீதித்துறையின் கடமைபாகும்.அல்லாது விட்டால் அடிப்படைவாதத்தால் தேர்தலில் வென்ற பின்னர்,அதிகார ஆணவத்தால் சட்ட, நிறைவேற்று, நீதி, பொதுநிர் வகத்துறைகளை ஆட்டிப்படைத்து உருத்திர தாண்டவம் ஆடிவிடுகின்றனர்.
தேர்தலிலும் நினைத்தவாறு மோசடிகள் செய்து தம்மையொத்த தலையாட்டிகளான மோசடியாளர்களைத் தேர்ந்தெடுத்தும் விடுகின்றனர்.
பின்னர் நாட்டையும் மக்களையும் அதல பாதாழத்தில் தள்ளி விடுகின்றனர்.ஆனால், , பாரிய இக்குற்றவாளிகளை மக்கள் இனங்கண்டு ஒதுக்கத் தவறி விடுகின்றனர்.
எனவே, சட்ட நடவடிக்கை மூலமாக பாரிய குற்றவாளிகளை அரசியலில் ஈடுபடாதவாறு ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். மக்களை மடையர்களாக்கி குற்ற வாளிகள் மகுடம் சூடுகின்ற கலாசாரம் உடன் நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இந்த நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நிலைக்கு மாறுவதைத தடுக்க முடியாது.
போர்க்குற்றவாளிகள் இப்போது பொருளாதாரக் குற்றவாளிகளாகவும் மாறிவிட்டனர். அவர்களை மேலும் அனுமதித்தால் நாட்டையே விற்று விடுவார்கள். அதுதான் இப்போது நடைபெற்று வருகின்றது என்பதை மக்கள் அறிந்தாக வேண்டும். இனவாதம் என்னும் கொடிய விசத்தால் நாட்டையும் மக்களையும் நரகத்தில் தள்ளிவிட்டு, பாரிய குற்றவாளிகள் சொர்க்கத்தில் திழைக்கிறார்கள்.