வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் காட்டிலும் பல முன்மொழிவுகள் கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எவையும் செயற்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2025ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“வழமையான அறிக்கையாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சபையில் வாசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பிட்ட முன்மொழிவுகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை.
நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வரவு – செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பதாலும், சொற்ப அளவில் சம்பளம் அதிகரிப்பதாலும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் வரவு – செலவுத் திட்டம் அமையவில்லை.
வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் சம்பிரதாயபூர்வமான வரவு – செலவுத் திட்டமாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து இறந்த காலத்தை அடியொற்றியதாக சகல முன்மொழிவுகளும் காணப்படுகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் காட்டிலும் பல முன்மொழிவுகள் கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டன.
ஆனால், எவையும் செயற்படுத்தப்படவில்லை. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள். எதனையும் செயற்படுத்தமாட்டார்கள்.” – என்றார்.