அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் அந்த சம்பவத்தை மூடிமறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
தென்னிந்திய பிரபலங்கள் இலங்கைக்கு வருவது ரொம்பவே அதிகரித்துள்ளது. கொழும்பில் இசை கச்சேரிகளை பல பாடகர்கள் வந்து நடத்தியிருக்கிறார்கள். இப்போது கொழும்புக்கு அப்பால் அதாவது யாழ்ப்பாணத்தில் சென்று இலவசமாக சந்தோஷ் நாராயணனன் இசை கச்சேரி ஒன்றை செய்திருந்தார்.
இந்த இசைக் கச்சேரியை பார்க்க அரச செலவில் அரச வாகனத்தை ஜீவன் தொண்டமான் எடுத்துகொண்டு சென்றாரா என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இந்த விபத்து ஒக்டோபர் 22ஆம் திகதி இரவு 09.45 மணியளவில் நடந்திருந்தாலும் இந்த விபத்து நடந்து 15 நாட்கள் கடந்துள்ளபோதிலும் இந்த விபத்து தொடர்பான எந்த செய்திகளும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்து நடந்தது யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில். இந்த விபத்து தொடர்பில் விபத்து நடந்த சில மணித்தியாலங்களுக்குள்ளேயே பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பொறுப்பதிகாரி தகவல்களை வழங்கியிருக்கிறார்.
ஆனால், பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடவில்லை.
நாட்டின் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் வாகனம் அல்லது அமைச்சின் வாகனம் விபத்துக்குள்ளாகியிருந்தும் அது தொடர்பில் பொலிஸார் ஊடகங்களுக்கு அறிவிக்காது மறைத்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.
இந்த விபத்து தொடர்பில் தகவல்களை பொலிஸ் ஊடகப்பிரிவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு பல மணிநேரங்கள் போராட வேண்டிய நிலையே ஏற்பட்டிருந்தது. இறுதியாக தகவல்கள் வழங்கப்பட்டன.
பொலிஸார் வழங்கிய தகவல்களை நாம் அப்படியே உங்களிடம் கூறுகிறோம். யாழ்ப்பாணபம் வேம்படி சந்தியில் ஏ 9 வீதியில் வைத்து ஒக்டோபர் 22ஆம் திகதி இந்த விபத்து நடந்துள்ளது. ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகனத்தின் சாரதி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஜீவன் தொண்டமானின் வாகனத்தின் சாரதி மற்றும் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஜீவன் தொண்டமானின் வாகன சாரதி மற்றும் லொறியின் சாரதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வாகன விபத்தின்போது ஜீவன் தொண்டமான் வாகனத்தின் உள்ளே இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு அழுத்தமாக எம்மிடம் கூறின. இந்த விபத்து தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் 15ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.