திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்பு மற்றும் ஆளுநரின் தடையுத்தரவுக்கு மத்தியில் இன்று (06) திங்கட்கிழமை காலை புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்ற பொரலுகந்த ரஜமகா விகாரைப் பகுதியில் இன்று காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டன.
குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப் பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பௌத்த மக்களே இல்லாத இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.