இலங்கை கிரிக்கெட் அணியின் மீதான நாடளாவிய அதிருப்தியின் பின்னணியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக சபை கலைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நிர்வாக சபை கலைக்கப்பட்டு புதிய இடைக்கால நிர்வாக சபை நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (06) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் புதிய இடைக்கால நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசாங்கத்துக்குள் மேலும் விரிசல் நிலை தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் 1973 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் 32 ஆம் பிரிவுக்கு அமைய விளையாட்டுத் துறை அமைச்சருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாக சபை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
புதிய இடைக்கால நிர்வாகக் சபையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.ஐ.இமாம், ரொஹிணி மாரசிங்க, ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, எச்.கே. உபாலி தர்மதாச, சட்டத்தரணி ரகித்த நிர்மல ராஜபக்ஷ, எம்.எச்.ஜமால்டீன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.