அகிம்சைக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பு தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிட்ட போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (06.11.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அகிம்சை வழியிலான நீதிக்கான போராட்டத்திற்கு ஜனாதிபதி தலையிட்டு இறுதியாக நடந்த கலந்துரையாடலின் பின்பும் தீர்வு கிட்டாத நிலையில் பண்ணையாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மட்டங்களிலும் குரல் எழுப்பி வரும் சூழ்நிலையில் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) ஜனநாயக வழியில் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசுக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டும் மீள திரும்புகையில் அம் மாணவர்களில் அறுவர் அநியாய குற்றச்சாட்டுகளுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது இனரீதியில் பொலிசார் நடத்திய அராஜகமே. அகிம்சைக்கும்இ ஜனநாயகத்திற்கும் மதிப்பு தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிட்ட போவதில்லை என்பதே உண்மை.
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின எனும் இனவாத மதவாத பிக்கு பகிரங்கமாக இனவாதத்தைக் கக்கி தூசன வார்த்தைகளை உமிழ்த்து அரச உத்தியோகத்தர்களை தாக்கி பொலிசாரை தாக்கி அராஜகம் புரிவது அனைவருக்கும் தெரிந்தது. அவரே மக்களை திரட்டி பொலிசாரின் வீதி தடைகளை உடைக்க முற்படுவதும் ஜனாதிபதியை அவதூறாக பேசியதும் அண்மையில் சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
அத்தகைய ஒருவரை பொலிசார் சாது சாது என காலில் விழுந்து வணங்கிக் கொண்டு ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களை கைது செய்திருப்பது உரிமை மீறும் செயல் மட்டுமல்ல அது போராட்டத்தில் ஈடுபடும் தமிழர்களுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தலுமாகும்.
தமிழ் பண்ணையாளர்கள் மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதற்காகவே வெட்டுவதும், கொலை செய்வதும் இனத் துரோக செயலாகும். ஏழை தமிழர்களின் பொருளாதாரத்துக்கு எதிரான செயலுமாகும். அத்தோடு மிருக வதைக்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றமாகும்.
சட்டத்தினை கையில் எடுத்து இத்தகைய கொடிய செயலினை தடுத்து நிறுத்த பொலிசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ் பண்ணையாளர்களின் வாடிகளை எரித்து நாசமாக்கி உள்ளனர். அதற்குரிய விசாரணை இல்லை. காரணம் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதாகும்.அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும்இ அவர்களின் பொருளாதார நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் எனும் இனவாதமாகும்.
பௌத்த சமயத்தை முன்னிலைப்படுத்தி வடகிழக்கின் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பேரின் வாதம்;
மேலும் தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை ஆக்கிரமித்து ராணுவம் விவசாயம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று மயிலத்தமடு மாதவனை தமிழ் பண்ணையார்களின் பொருளாதாரத்தை அழிக்க முற்படுகின்றனர். இது நாட்டின் பொருளாதரத்தை அழிக்கும் செயலாகும்.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்காத தமிழருக்கு எதிராக போர் தொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடி கடனுக்குள் தள்ளிய இனவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் கவலையற்று; நாட்டின் பொருளாதாரம் அழிந்தாலும் பரவாயில்லை தமிழர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி விடக்கூடாது என நினைப்பது தமிழர்களுக்கும் அவர்களின் பொருளாதாரத்துக்கும் எதிரான இன அழிப்பு போரின் மாற்று வடிவமாகும்.
வடகிழக்குத் தமிழர்களின் மண்மீட்புக்காக போராடி உயிர் தியாகம் ஆனோரை நினைவு கூருவதற்காக அவர்களின் துயிலும் இல்லங்களே ஆயத்தப்படுத்தும் இக்காலகட்டத்தில் துயிலும் இல்லங்களில் இருந்து எழும் அவர்களின் ஏழுச்சி குரல்களுக்கு செவி மடுப்போம்.
மாவீரர் நடந்து திரிந்த நிலமெங்கும் அவர்களின் உயரிய இலட்சியத்தை அடையாளப்படுத்தி அதனை நிறைவேற்றுவதற்கான மாற்று வழியிலான போராட்டத்தினை மாவீரர் வாரத்துக்கு முன்னர் நடத்தி ஏற்றவுள்ள தியாக சுடர்களை உயிர்புள்ளதாக்க சிவில் சமுகம் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.