மாணவனை புலமைபரிசில் பரீட்சை எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்

Share

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்விகற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவன் வயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட காரணத்தினால் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்துள்ளான். இதனால் பாடசாலை செல்லவில்லை என்ற காரணத்தினால் அந்த மாணவனை தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதவிடாது பாடசாலை சமூகம் தடுத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் கூலிவேலைசெய்து தங்கள் குடும்பத்தினை கொண்டு செல்லும் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான தரம் 5 இல் கல்விகற்ற மாணவனுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது அவனது அக்காவான சகோதரி தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி கற்று வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த மாணவனை புலமை பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தயார் படுத்தியுள்ளார்கள் இதன்போது குறித்த மாணவனக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக வயிற்று பகுதியில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனால் குறித்த மாணவன் இரண்டு மாத காலமாக பாடசாலை செல்லவில்லை அதற்கான மருத்துவ அறிக்கையினையும் பெற்றோர்கள் காட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் புலமை பரிசீல் பரீட்சைக்கான நாள் கடந்த 15.10.2023 அன்று நெருங்கி வந்த வேளை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை அழைத்து குறித்த மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபரிடமும் பெற்றோர்கள் முறையிட்ட போது மாணவன் 70 புள்ளிகளுக்கு கீழ்த்தான் பரீட்சைகளில் புள்ளி எடுக்கின்றார் இது போதாது புலமை பரிசில் பரீட்சை முக்கியமில்லை அதனால் பிரச்சினை இல்லை பிறகு படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் பெற்றோரிடம் கடிதம் ஒன்றினை எழுதி கையெழுத்தும்  வாங்கியுள்ளது.

பாடசாலை நிர்வாகம் தங்கள் பரீட்சை விகிதாசாரத்தினை சிறப்பாக காட்டவேண்டும் என்பதற்காக ஒரு மாணவனை பரீட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாணவன் உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்போது பாடசாலை போவதற்கு விருப்பம் அற்ற நிலையில் பரீட்சை எழுதாதது அவனது பெரிய ஒரு ஆசையினை தடுத்துள்ளதை போன்று காணப்படுவதாகவும் அவனுக்கு மனக்கவலையாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் யாரிடமும் முறையிட முடியாத நிலையில் குறித்த குடும்பம் இவ்வளவு காலமும் இருந்து வந்துள்ள நிலையில் 05.11.2023 அன்று இந்த தகவல் முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு கிடைக்கப்பெற்று குறித்தவீட்டிற்கு சென்று சம்பவத்தினை நேரடியாக விசாரித்திருந்தோம்.

பாடசாலை சமூகம் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு பாடசாலை மாணவரின் பரீட்சையினை தடைசெய்வது அவனை தடுப்பது என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படவேண்டும்.

இது தொடர்பில் கல்வி திணைக்களமோ கோட்டக்கல்வி அலுவலகமோ,சிறுவர் உரிமைதொடர்பில் அக்கறை கொண்ட அமைப்புக்களோ உடனடியாக கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதுடன் இனி இவ்வாறான சம்பவம் வேறு எந்த கஸ்ரப்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு