பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அதே நேரத்தில் பலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் முக்கியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 7ஆம் திகதி அன்று இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான எல்லை ஓரத்தில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டின் பகுதியில் இருந்து பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து சென்றனர். அதையடுத்து காஸா மீது தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல்.
இதில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 5,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்து வருகிறது. இதையடுத்து, இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களில் இதுவரை 9,061 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 3,760 பேர் குழந்தைகள், 2,326 பேர் பெண்கள். இதுவரை சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக’ பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதோடு, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடினமான இந்த நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இத்தாலியில் வெளியுறவுத் துறைக்கான செனட் உறுப்பினர்களிடையே பேசிய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், “அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடந்தது கொடூரமான பயங்கரவாத தாக்குதல்.
அதற்குப் பிறகு நடந்த செயல்கள் அனைத்தும் அந்தப் பகுதியையே வேறு திசைக்குக் கொண்டு சென்றுள்ளது. பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் முக்கியம்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை முக்கியமானதாகும். ஒருபோதும் மோதல் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் தீர்வு காண முடியாது.
தற்போதைய சூழ்நிலையில் மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும். ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு முழு ஆதரவை தெரிவித்த முதல் உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். அங்கு மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும். அப்பகுதியில் தொடர்ந்து மோதல் நீடிக்கக் கூடாது” என்றார்.