மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் “அனைத்துத் தமிழர்களையும் வெட்டி கொல்லுவேன். தென்னிலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் சிங்களவர்கள் வெட்டி கெல்லுவார்கள்.” என்று எச்சரித்துள்ள விவகாரம் இலங்கையில் பெரும் பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் அம்பிட்டியவுக்கு எதிராக அமைச்சர்கள் என பலர் பொலிஸ்மா அதிபரிடமும் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். சி.ஐ.டியிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ICCPR சட்டத்தின் கீழ் அம்பிட்டிய தேரரை கைது செய்ய வேண்டும் என சட்டத்தரணி ஒருவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இப்பிடியான பின்னணியில், நாட்டில் இனக் கலவரத்தை தூண்டும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உயிரச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய சுமனரத்ன தேரருக்கு எதிராக பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரிடம் வினவப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பா.நிரோஸ்குமாரால் இந்த விண்ணப்பம் பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான தகவல்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 25(3) கீழ் 48 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுத்திருக்கும் நிலையில் அது தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள், அந்த முறைப்பாடுகளுக்குப் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான தகவல்களை வழங்க வேண்டுமென ஊடகவியலாளர் பொலிஸ் தலைமையகத்திடம் கோரியுள்ளார்.
27.10.2023 அன்று இந்த விண்ணப்பப்படிவம் பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 31.10.2023 அன்று ஊடகவியலாளருக்கு பொலிஸ் தலைமையகத்திலிருந்து பதில் கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. அக்கடிதத்தில் “மட்டக்களப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மட்டக்களப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடமிருந்து இதுவரையில் பதில் கடிதம் கிடைக்கவில்லை என்பதால், பொலிஸ் திணைக்களத்தின் குறித்தளிக்கப்பட்ட தகவல் அதிகாரியான பொலிஸ்மா அதிபருக்கு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரும் 48 மணித்தியாலங்களுக்கு தகவல்களை வழங்கவில்லை என்றால், தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யவும் ஊடகவியலாளர் எதிர்பார்த்துள்ளார்.
தமிழ் மக்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் அம்பிட்டிய தேரர் தொடர்பில் இதுவரையில் பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆகக்குறைந்தது இந்த சம்பவம் தொடர்பில் அம்பிட்டிய தேரரிடம் வாக்குமூலம் கூட இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை.