வடக்கு கிழக்கில் கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலி பயங்கரவாத அமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி கோரி வவுனியா மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்பாக இன்று (01.11.2023) காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதமர் தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்த்தன அவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு இன்று வருகை மேற்கொண்டிருந்த நிலையிலேயே வவுனியா போகாஸ்வேவ பகுதியினை சேர்ந்த மக்களினால் இவ் போராட்டம் இடம்பெற்றது.
கடந்த யுத்த காலத்தில் பயங்கரவாத விடுதலைப்புலி அமைப்பினர் வடக்கு கிழக்கில் இருந்த சிங்கள மக்களை வெட்டியும் , படுகொலையும் செய்திருந்தனர். அவற்றிலிருந்து தப்பித்துச்சென்ற சிங்கள மக்கள் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது யுத்தம் நிறைவடைந்தமையின் பின்னர் மீள்குடியேறிருந்தனர்.
எனினும் வடகிழக்கில் மீள்குடியேறிய தமிழ் மற்றும் முஸ்ஸிம் மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்கள் , அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வழங்கப்பட்டிருந்த போதிலும் மீள் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு அரசாங்கம் எவ்வித அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் வவுனியா போகாஸ்வேவ பகுதியிலுள்ள மக்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகம் என்பன வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் வாக்காளர் இடாப்பு அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
நல்லிணக்கம் என தெரிவிக்கும் ஜனாதிபதி வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை மாத்திரம் புறக்கணிப்பது ஏன்? எமக்கு அடிப்படை வசதிகள் , விவசாய காணிகள் , வாக்காளர் இடாப்பு போன்ற அடிப்படை வசதிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட செயலக பிரதான வாயிலின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகத்தினுள் உள்நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையுடன் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பிரதமர் தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்த்தன மாவட்ட செயலகத்தின் மற்றைய பாதையூடாக வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.