காஸாவுக்குள் முன்னேறும் இஸ்ரேலியப் படை; ஹமாஸின் 450 இலக்குகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்

Share

இஸ்ரேலின் இராணுவப் படை காஸாவில் திட்டமிட்டபடி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று இஸ்ரேலின் இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹேகாரி தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இஸ்ரேல் படை 12 க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்றுள்ளதாக கூறினார்.

ஹமாஸ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள காஸா வட்டாரத்துக்குள் இஸ்ரேலியப் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள படத்தை இஸ்ரேலிய இராணுவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

தரைவழித் தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலிய பீரங்கிகள் காஸா வட்டாரத்துக்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான மூன்று வார போரில் இரண்டாவது கட்டத்தில் நுழைந்துள்ளோம் என்று இஸ்ரேல் தன்னிச்சையாக அறிவித்தது.

இதையடுத்து தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ள காஸாவை நோக்கி இரவு நேரத்தில் இஸ்ரேல் பீரங்கிகள் நகர்ந்து சென்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி, இணையத் தொடர்பு ஓரளவு மீண்டது என்று காஸா குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. இஸ்ரேலிய இராணுவ பீரங்கிகள், காஸாவுக்குள் நுழைந்தது, இஸ்ரேலிய வீரர்கள் தங்களுடைய நாட்டின் கொடியை காட்டுவது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்தப் படங்களின் நம்பகத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இஸ்ரேலியப் படைகளை தொடர்ந்து தாக்கி வருவதாக ஹமாஸும் கூறியுள்ளது.

இஸ்ரேலிய வீரர்கள் மீது குண்டுகளை வீசி, பீரங்கிகள் மீது ஏவுகணைகளை பாய்ச்சி வருகிறோம் என்று ஹமாஸ் குறிப்பிட்டது.

இஸ்ரேல் எங்களை உலகத் தொடர்புகளிலிருந்து துண்டித்துவிட்டது. வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் எங்களுக்கு கேட்கிறது. அதே சமயத்தில் எதிரி படைகள் எங்களை நெருங்காமல் நின்றுவிட்டது பெருமையாக உள்ளது,” என்று காஸா நகரத்தில் தங்கியுள்ள பொதுச் சேவை ஊழியரான ஷாபான் அகமட் தெரிவித்தார்.

இஸ்ரேலின் தற்காப்புப் படை வீரர்கள் 450 ஹமாஸ் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, இருதரப்பினரும் போர் நிருத்தத்திற்கு வரவேண்டுமென ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு