மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாத்திரம் நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
அதன்படி, இன்று மாலை 6.30 மணிக்கு நாவலப்பிடி, மாதம்பாகம உஸ்முது லாவா முற்சந்தி, குருநாகல் ஆகிய பகுதிகளிலும், மாலை 7 மணிக்கு பலப்பிடிய, .அம்பலங்கொட-அலுத்வல முற்சந்தி, சிலாபம் மணிக்கூட்டு கோபுரம், கைதடி-விழினயடி சந்தி ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மின் கட்டண அதிகரிப்பு
வருடத்திற்கு இரு முறை மாத்திரமே மின் கட்டண அதிகரிப்பை ஏற்படுத்தலாம் என மின்சார சட்டம் கூறுகிறது. ஆனால், அரசாங்கம் பல தடவைகள் மின் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஆனால், முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் மின்சார சபையினால் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.
முதல் கட்டமாக 69.9 வீதத்தால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இரண்டாவது தடவை 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் 153 வீதத்தால் மின் கட்டணத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்து வருகிறது. அதன்படி இன்றும் (28) நாடு பூராகவும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
‘மின் கட்டண அதிகரிப்பு’- எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், புனித ஸ்தலங்களிலும் கறுப்புக்கொடி ஏற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும், போயா தினத்தன்று இரவு 7.00 மணி முதல் 7.30 மணி வரை அரை மணி நேரம் மின் விளக்குகளை அனைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாட்டின் பல இடங்களில் போராட்டம்
அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்குமாறும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறும் வலியுறுத்தி கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன்படி, 25 ஆம் திகதியன்று வத்தேகம, பாததும்பர, ஹரிஸ்பத்துவ, அக்குரணை, மட்டக்களப்பு-கல்லடி பாலம், மத்திய கொழும்பு, பேஸ்லைன் வீதி ராஜசிங்க கல்லூரி தெஹிவளை சந்தி மற்றும் கலகெதர, ஹெதெனிய சந்தி ஆகிய பகுதிகளிலும், குண்டசாலை, திகன, பலபிட்டிய நகரம், அக்மீமன -தலகஹ சந்தி, நிகவெரட்டிய, வியலுவ மற்றும் கந்தகெட்டிய ஆகிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா மற்றும் மாத்தறை, கம்புருகமுவ, ஹட்டன் நகரம் மற்றும் மிரிஸ்வத்த ஆகிய பகுதிகள் 26 ஆம் திகதியன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.