பொகவந்தலாவை கெசெல்கமு ஓயாவை சுத்தப்படுத்தும் போது கிடைக்கும் மாணிக்கக்கல் படிமங்களை அகற்றுவதற்கான ஏல தொகையாக 7 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பொகவந்தலாவை பிரதேச மாணிக்கக்கல் வியாபாரிகளின் கடும் எதிர்ப்புகளால், 5 கோடியே 30 இலட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
இதனால், அரசாங்கத்துக்கு ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதோடு, ஏலம் விடுவதற்காக வந்திருந்த தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் அதிகாரிகளை பொலிஸார் முன்னிலையில் அரசியல்வாதிகளின் ஆதரவோடு பொகவந்தலாவைப் பிரதேச மாணிக்கக்கல் வியாபாரிகள் அச்சுறுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின், “கிலானி பாலம் முதல் டியன்சின் பாலம் வரை கெசெல்கமு ஓயா சுத்தப்படுத்தும் கருத்திட்டம்” என்கிற பெயரில் சர்ச்சைக்குரிய இத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கெசெல்கமு ஓயாவை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் மாணிக்கக்கல் படிமங்களைஅகற்றுவதற்கான ஏலம் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், பொகவந்தலாவை தண்டாயுதபாணி கோவிலின் கதிரேசன் மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது.
நடைபெற்ற ஏலத்தில், தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபை பணிப்பாளர் நாயகம் ஜானக உதயகுமார, அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் (காணி, அகழ்வு, சுற்றாடல்) G.W.அமரசிறி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஏலம் நடைபெற்றது.
நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவிகுழந்தைவேல், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் உள்ளிட்டோர் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதற்கு மேலதிகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய பதவிகளில் உள்ள பலரும் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
கெசெல்கமு ஓயாவை 500 மீற்றர் தூரத்துக்கு சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் மாணிக்கக்கல் படிமங்களை அகற்றுவதற்கான ஏல விலை 7 கோடி ரூபாய் என தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து உரையாற்றிய பொகவந்தலாவை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவர், “7 வருடங்களுக்குப் பின்னர் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை பொகவந்தலாவைக்குவந்திருக்கிறது.
அதிகளவான மாணிக்கக்கல் வளத்தைக்கொண்ட பொகவந்தலாவையில் மாணிக்கக்கல் அகழ்வுகளை தர மறுப்பதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்களுக்கு வேண்டுமாக இருந்தால் 7 கோடிரூபாய் சிறிய தொகையாகஇருக்கலாம்.
ஆனால், எங்களுக்கு இது அதிகமானது. எனவே, ஏல விலையைகுறைக்கவில்லை என்றால், இந்த ஏலத்திலிருந்துநாங்கள் விலகுகிறோம்.” எனஅறிவித்தார்.
இதன்போது அங்கு உரையாற்றிய மற்றொருநபர், “தான் அவிசாவளையில் இருந்து வருவதாகவும், அவிசாவளையில் இதைவிட அதிகளவான மாணிக்கக்கல் இருக்கிறது.
ஆனால், அங்கு 2 கோடி ரூபாய்க்கும் குறைந்தவிலையிலேயே மாணிக்கக்கல் ஏலம் விடப்பட்டது. இவ்வாறான நிலையில், பொகவந்தலாவையில் ஏன் 7 கோடிரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது?” எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் அதிகாரி, “நான் உள்ளிட்ட இங்குள்ள அதிகாரிகள் எவருக்கும் தீர்மானிக்கப்பட்ட ஏலத் தொகையை மாற்றுவதற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை.” என தெரிவித்து ஏலத்தை ஆரம்பித்தார்.
இதன்போது, 700 இலட்ச ரூபாய்க்கான (7 கோடி) ஏலம் ஆரம்பிக்கப்பட்டு ஏலத் தொகை 700 இலட்சம் என ஒலிவாங்கியில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஏலம் எடுப்பதற்காக வந்திருந்த வியாபாரிகள் இந்தத் தொகைக்கு ஏலம் எடுக்க முடியாதென தெரிவித்து அமர்ந்திருந்த ஆசனங்களில் இருந்து எழும்பி, அதிகாரிகளுக்கு அருகில் வந்து அங்கிருந்த அதிகாரிளை அச்சுறுத்தும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகளிடம் உரையாற்றியதொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரனி தலைவர் பா.சிவநேசன், “நீங்கள் ஏலம்விடுவதற்கு வந்துள்ள பகுதியில் திருட்டுத்தனமாக மாணிக்கக்கல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே அங்கு இல்லம் (மாணிக்கக்கல்படிமங்கள்) இருக்காது. நாங்களும் எவ்வளவாவது தேடிக்கொள்ள வேண்டும். எனவே ஏல தொகையை குறைத்து சொல்லுங்கள். இதில் எமக்குஅதிகளவான செலவுகளும் உள்ளன. அரசாங்கத்துக்கும் வருமானத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” என அதிகாரிகளிடம் வாக்குவாதப்பட்டார்.
எனினும், தீர்மானிக்கப்பட்ட ஏலத் தொகையில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாதென அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்தார்கள். இந்த பின்னணியிலேயே பொகவந்தலாவை நகரில் சிறுதுநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், ஏலம் நடைபெற்ற மண்டபத்திலும் மின்சாரம் திடீரென தடைப்பட்டது.
இதன்போது, அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) “நிலைமைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் (வியாபாரிகள்) அதிகாரிகளை உள்ளே வைத்து மண்டபத்தை மூடுவதற்குத் தயாராகிறார்கள்.” என தொலைபேசியில் யாருக்கோ அறிவித்தார்.
இதன்போது, அதிகாரிகளிடம் வாக்குவாதப்பட்ட நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல், “ஏலம் விடுவதற்காக கெசெல்கமு ஓயாவை சுத்தப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளையே அதனை நாம் ஆரம்பிப்போம்.” என்றார்.
அதிகாரிகளிடம் வாக்குவாதப்பட்ட வியாபாரி ஒருவர், “இந்த வேலைத்திட்டத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிதி ஒதுக்கீடுகளை செய்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் இந்த திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
எனவே, உங்களின்இந்த செயற்பாடுகளால், இந்த வேலைத்திட்டத்துக்கு எந்தவிதமானப் பாதிப்புகளும் ஏற்படமுடியாது. தோண்டப்பட்டுள்ள இல்லத்தை (மாணிக்கக்கல் படிமங்கள்) எடுப்பதற்கு மக்கள் சென்றால், தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையும் சாமர சம்பத்துமேமுழுப் பொறுப்பு. அமைச்சரின் தொலைபேசி இலக்கத்தைத் தாருங்கள். இல்லை என்றால் நாம் ஜனாதிபதியுடன் பேசுகிறோம். உங்கள் அனைவரையும் நாம் வெளியில் செல்ல அனுமதிக்கப்போவதில்லை.” எனவும் எச்சரித்தார்.
மாற்றவேமுடியாதென கூறிய ஏலத்தொகை மாற்றப்பட்டது
மாணிக்கக்கல் வியாபாரிகளின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணிந்த தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபைமாற்றவே முடியாதென கூறிய 7 கோடி ரூபாய் ஏலத்தொகையை மாற்றுவதாக அறிவித்தது. இதன்படி, புதிய ஏலதொகையாக 5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியானது.
5 கோடியே 10 இலட்ச ரூபாய்க்கு முதலாவது ஏலம்கோரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரனி தலைவர் பா.சிவநேசன் 5 கோடியே 20 இலட்சம் ரூபாய்க்கு தான் ஏலம் எடுப்பதாக அறிவித்தார். எனினும், 5 கோடியே 30 இலட்ச ரூபாய்க்கு அங்கிருந்தவர் ஏலத்தைகேட்க, 5 கோடியே 30 இலட்ச ரூபாய்க்கு ஏலம் இறுதியாக உறுதிசெய்யப்பட்டது.
கெசெல்கமு ஓயாவில் உள்ள மாணிக்கக்கல் படிமங்களை அகற்றுவதற்கு ஏலம் எடுத்த அந்த வியாபாரியை தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரனி தலைவர் பா.சிவநேசன், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேலு ஆகியோர் கைலாகு கொடுத்து வாழ்த்தினார்கள்.
அச்சுறுத்தலுக்கு அடிப்பணிந்ததால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நட்டம்
கெசெல்கமு ஓயாவை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் மாணிக்கக்கல் படிமங்களை அகற்றுவதற்கான ஏலத்தொகையாக தேசிய இரத்தினக்கல் அதிகாரசபை ஆரம்பத்தில் 7 கோடி ரூபாயை நிர்ணயித்திருந்த நிலையில், பின்னர் மாணிக்கக்கல் வியாபாரிகளின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணிந்து ஏலத்தொகையை 5 கோடிரூபாய்க்கு மாற்றியதால் அரசாங்கத்துக்கு 1 கோடியே 70 இலட்ச நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்டம் தொடர்பில் தேசியஇரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை பணிப்பாளர் நாயகம்ஜானக உதயகுமாரிடம் வினவினோம், “எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது பொலிஸாரும் எமக்குப் பாதுகாப்பு வழங்க முடியாதென கூறிவிட்டார்கள். அமைச்சின் அனுமதியுடனே நாம் இதனை செய்தோம். எமக்குவேறு வழியில்லை.” என்றார்.
ஏல தொகையைில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென ஆரம்பத்தில் கூறினீர்களே, பின்னர் எப்படி இந்த தொகையில் மாற்றினீர்கள்? “பொலிஸாரும் எமக்குப் பாதுகாப்பை வழங்க முடியாது என கூறிவிட்டார்கள். மக்களும் அதிகளவில் கூடிவிட்டார்கள். நாங்கள் என்ன செய்வது? அரச அதிகாரிகளிடம் ஆயுதங்கள் இல்லையே. பொலிஸாருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாதளவுக்கு மக்கள் அங்கு கூடிவிட்டார்கள். எங்களுக்கு வேறு வழியில்லை.” என கூறினார்.